
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து அதிமுக எடப்பாடி பழனிசாமியின் வசம் சென்றுள்ளது. இதன் காரணமாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி விரைவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக வந்துள்ளதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.