புதுச்சேரி:
புதுச்சேரியில் தற்காலிகமாக பணியாற்றி வரும் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதனால் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் கொரோனா காலக்கட்டத்தின் போது பல்வேறு ஊழியர்கள் தற்காலிகமாக பணியில் நியமிக்கப்பட்டனர். பணியில் நியமிக்கப்படுவதற்கு முன்பாகவே எக்காரணம் கொண்டும் பணி நிரந்தரம் வழங்கப்படாது எனவும், எக்கட்டத்திலும் பணி நீக்கம் செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தற்காலிக அரசு ஊழியர்கள் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் எனவும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும் அவ்வப்போது கோரிக்கை வைத்து வந்தனர்.
அதாவது, தற்காலிக ஊழியர்களுக்கு மாத சம்பளமாக ரூ.10,000 வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்காலிக ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் பணி புரியும் தற்காலிக ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட போவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அதாவது, ஊழியர்களின் ஊதியம் ரூ.10,000 லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த திடீர் அறிவிப்பினால் தற்காலிக ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.