ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து நேற்று நள்ளிரவு தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. ஓட்டுநரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் 25 பயணிகள் உயிர்தப்பினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் வைத்திருந்த பல லட்சம் மதிப்புள்ள நகை, பணம் மற்றும் செல்போன்கள் கருகியது

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு நேற்றிரவு தனியார் சொகுசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் 25 பேர் பயணித்தனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் பித்ரகுண்டா தேசிய நெடுஞ்சாலை வழியாக இந்த பஸ் வந்துகொண்டிருந்தது. அப்போது, பஸ்சின் முன்பகுதியில் திடீரென குபுகுபுவென புகை வந்தது. இதனை கவனித்த டிரைவர் உடனடியாக பஸ்சை சாலையோரம் நிறுத்தி பயணிகளை உஷார்படுத்தினார். இதையடுத்து பஸ்சில் இருந்த அனைத்து பயணிகளும் அலறியடித்துகீழே இறங்கினர். பயணிகள் இறங்கிய சில நிமிடங்களில் பஸ் முழுவதும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது.
இதுகுறித்து காட்ஜூமல்லி போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். டிரைவரின் சமார்த்தியத்தால் அனைத்து பயணிகளும் உயிர் தப்பினர். இருப்பினும் பஸ்சில் இருந்த அவர்களது உடமைகளும் தீயில் கருகியது. அதில் பலரது பைகள் மற்றும் சூட்கேசுகளில் விலைமதிப்புமிக்க நகை, பணம், செல்போன்கள் மற்றும் விலை உயர்ந்த ஆடைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கருகியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.