தமிழ்நாடு அரசு வள்ளலார் பெரு வெளியில் பன்னாட்டு மையம் கட்டுவதைக் கைவிட்டு, வேறொரு இடத்தில் வடலூரிலேயே அமைத்தல் தொடர்பாக தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை வெளியிட்டார். அவர் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது : வள்ளலார் 157 ஆண்டுகளுக்கு முன் 1867-இல் நிறுவிய வடலூர் சத்திய ஞான சபைப் பெருவெளி 106 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட வெட்ட வெளியாகும். அங்குள்ள பார்வதிபுரம் மக்கள் அன்பளிப்பாக வள்ளலாருக்கு வழங்கிய நிலங்கள் இப்பெருவெளி. இந்த 157 ஆண்டுகளில் அந்தப் பெருவெளியில் எந்தப் பின்னமும், சிதைவும் ஏற்பட்டதில்லை. வள்ளலார் ஆன்மிக மெய்யியலில் பெருவெளி என்பது இறைவன் உலவும் வெளியாகவும், பேரண்டக் கோட்பாடாகவும் இருப்பதால் அதில் யாரும் எந்தச் சிதைவும் ஏற்படுத்த வில்லை.
வள்ளலார் 200 ஆண்டை ஒட்டி, தமிழ்நாடு அரசு 100 கோடி ரூபாய் செலவில் வள்ளலார் பன்னாட்டு மையம் நிறுவப்போவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தபோது மகிழ்ந்தோம். ஆனால், அந்தப் பன்னாட்டு மையக் கட்டடங்கள், வடலூர்ப் பெருவெளியை அழித்து அதில் கட்டப்படும் என்ற கொடுஞ்செய்தி அப்போது அறிவிக்கப்படவில்லை. கடந்த பல நாட்களாக பொக்லைன் வைத்துப் பாதாளப் பள்ளங்கள் வெட்டி பெருவெளியைக் குதறிக் கொண்டிருக்கிறார்கள், ஒப்பந்தக்காரர்கள்.
“அண்ணுறு சிற்பர வெளியாய்த் தற்பரமாம்
அமர்ந்த பெருவெளியாகி அருளின்ப வெளியாய்”
இறைவன் உலவும் இடம் பெருவெளி என்பார் வள்ளலார்.
வடலூர் சத்திய ஞான சபைப் வெருவெளியில் பன்னாட்டு மையக் கட்டடங்கள் கட்டத் திட்டமிட்டுள்ளார்கள் என்பது தெரிந்தவுடன் வள்ளலார் பணியகப் பொறுப்பாளர்கள் 8.12.2023 அன்று இந்து சமய அறநிலையத் துறையின் கடலூர் இணை ஆணையரிடம் பெருவெளியைத் தவிர்த்து வேறிடத்தில் கட்டுமாறு கோரிக்கை மனு கொடுத்தார்கள். அதே கோரிக்கையை முன்வைத்து கடலூரில் 10.1.1024 அன்று மக்கள் திரள் உண்ணாப் போராட்டமும், 20.2.2024 கடலூரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டமும் வள்ளலார் சபை அன்பர்களும், வள்ளலார் பணியகத்தாரும், தெய்வத் தமிழ்ப் பேரவையினரும் இணைந்து நடத்தினர். குடந்தையில் 18.3.2024 அன்று ஆர்ப்பாட்டமும், தஞ்சையில் 29.3.2024 அன்று மாபெரும் பொதுக்கூட்டமும் நடத்தினர்.
ஆனால், தமிழ்நாடு அரசு முரட்டுத்தனமாக வள்ளலார் பெருவெளியை வெட்டிச் சிதைப்பது தொடர்கிறது. வள்ளலார் சத்திய ஞான சபையும், பெருவெளியும் அமைந்துள்ள பார்வதிபுரம் கிராம மக்கள் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் 400க்கும் மேற்பட்டோர் பெருவெளியை வெட்டிச்சிதைக்கும் பொக்லைன்கள் முன் இன்று (8.4.2024) மறியல் நடத்தித் தடுத்துள்ளார்கள். உடனே காவல்துறை அவர்களைத் தளைப்படுத்தி மண்டபத்தில் அடைத்துள்ளார்கள்.
வள்ளலார் பெருவெளியை அழிக்காதீர் என்ற இதே கோரிக்கையைத் தமிழ்நாடு அரசுக்கு முன்வைத்து 10.4.2024 புதன் காலை 10 மணிக்கு சன்மார்க்க சங்க சபைகளைச் சேர்ந்தோரும், வள்ளலார் பணியகம் மற்றும் தெய்வத் தமிழ்ப் பேரவையினர் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களும் மக்களும் வடலூர் வள்ளலார் பெருவெளி நுழைவு வாயில் முன்பாகக் கோரிக்கை ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடத்த உள்ளார்கள்.
தமிழ்நாடு அரசு வள்ளலார் பெரு வெளியில் பன்னாட்டு மையம் கட்டுவதைக் கைவிட்டு, வேறொரு இடத்தில் வடலூரிலேயே அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.