சென்னை : சமூகநநீதிக்கு வித்திட்டவருமான அண்ணல் அம்பேத்கர் சிலையோ படங்களையோ அகற்றுவது என்பது அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயலாகவே உள்ளது என்று செல்வப்பெருந்தகை எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு, புதுச்சேரி உள்ள நீதிமன்றங்களில் தேசத்தந்தை மகாத்மா காந்தி, திருவள்ளுவர் ஆகியோரை தவிர வேறு எந்த தலைவர்களின்; சிலைகளும், உருவப்படங்களும், வைக்கப்படக் கூடாது என்று அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கை ஏற்புடையதல்ல.
மேலும் சென்னை ஆலந்தூரில் கட்டப்பட்டுள்ள புதிய நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் படத்தை அகற்றவும் கூறி சுற்றிக்கை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது போல் தெரிகிறது. இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கதக்கது. சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களின் சங்கங்கள் சேர்ந்து அன்றைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியால் அம்பேத்கர் அவர்களின் சிலை நிறுவப்பட்டது.
வருடந்தோறும் அவரது பிறந்தநாள் மற்றும் நினைவுநாட்களில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்துகிறார்கள். அத்தகைய போற்றுதலுக்குரிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியவரும், சமூகநநீதிக்கு வித்திட்டவருமான அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலையோ படங்களையோ அகற்றுவது என்பது அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயலாகவே உள்ளது.எனவே, தமிழ்நாட்டின் சமூகநீதி பாதுகாவலரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டுமென என கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூறினார்.