வள்ளலார் பெருவெளி சிதைப்பை எதிர்த்து பார்வதிபுரம் மக்கள் மீது போட்ட பழிவாங்கும் வழக்கைத் திரும்பப்பெறு என்று தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில்,
அருட்பிரகாச வள்ளலாரின் 200ஆம் ஆண்டை ஒட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் வள்ளலார் பன்னாட்டு ஆய்வு மையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். எல்லோரும் வரவேற்றோம். பாராட்டினோம்.
அந்தப் பன்னாட்டு மையத்தை வடலூரில் சத்திய ஞானசபையின் பெருவெளியில் அமைக்கப் போவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தவுடன், வள்ளலார் அன்பர்களுக்குப் பேரதிர்ச்சியும், பெருங் கவலையும் ஏற்பட்டது. ஏனெனில், சத்திய ஞானசபைப் பெருவெளி என்பது வெறுந்திடல் அல்ல. அது வள்ளலாரின் ஆன்மிகத் தத்துவத்தின்படி இறையின் இயக்கப் பெருவெளி! சத்திய ஞானசபை என்ற தலையுடன், பிரிக்க முடியாத உடல் பகுதியே அப்பெருவெளி. அந்தப் பெருவெளியில் புதிய கட்டுமானங்கள் – கட்டுவது இறைப் பெருவெளியைச் சிதைப்பதாகும்.
வள்ளலார் பணியக அன்பர்கள் கடந்த 08.12.2023 அன்று, இந்து சமய அறநிலையத் துறையின் கடலூர் இணை ஆணையரை நேரில் சந்தித்து, வடலூர் சத்திய ஞானசபைப் பெருவெளியில் மேற்படி பன்னாட்டு மையத்தைக் கட்டாமல், வேறு இடத்தில் கட்டுமாறு அரசுக்குக் கோரிக்கை மனுக் கொடுத்தனர். அந்தப் பெருவெளி, 150 ஆண்டுகளாக அப்படியே காக்கப்பட்டு வருகிறது என்பதை அரசுக்கு விளக்கி இருந்தார்கள்.
அரசுக்கு இதே கோரிக்கையை முன்வைத்து சன்மார்க்க அன்பர்கள் 10.01.2024 அன்று கடலூரில் உண்ணாப் போராட்டம் நடத்தினார்கள். அந்த அறப்போராட்டத்தைக் காவல்துறையை ஏவி ஆட்சியாளர்கள் கலைத்தார்கள். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வள்ளலார் அன்பர்களின் – பொது மக்களின் பல்வேறு அரசியல் கட்சிகளின் வேண்டுகோளைப் புறக்கணித்து, 17.01.2024 அன்று, சென்னையிலிருந்தவாறே, காணொலி வழியாக வள்ளலார் ஆன்மிகத்திற்கு முரணான வகையில் பூமிபூஜை செய்ய வைத்து, அடிக்கல் நாட்டினார். அதேநாளில், அதே வேளையில் வடலூரில் பாட்டாளி மக்கள் கட்சி மேற்படி பூமிபூஜையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. பா.ம.க.வினரோடு வள்ளலார் பணியக கடலூர் மாவட்ட அமைப்பாளர் திரு. முருகன்குடி க. முருகன், செயற்குழு உறுப்பினர் முனைவர் வே. சுப்பிரமணிய சிவா, மா. மணிமாறன் போன்றோரும் கைது செய்யப்பட்டார்கள்.
அதன்பிறகு தமிழ்நாட்டின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களும், கூட்டங்களும் நடத்தி, வள்ளலார் அன்பர்கள் தமிழ்நாடு முதலமைச்சர்க்குக் கோரிக்கை வைத்து, வள்ளலார் பெருவெளியைச் சிதைக்காமல் வெளியே பன்னாட்டு மையத்தைக் கட்டக் கேட்டுக் கொண்டார்கள்.
ஆனால், தமிழ்நாடு அரசு வேகமாக மேற்படிக் கட்டுமானங்களைக் கட்டுவதற்கான ஒப்பந்தக்காரரை அமர்த்தி, வேலையைத் தொடங்கச் செய்து, ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் பெருவெளியை வெட்டிப் பிளக்கச் செய்தது. பெரும் பெரும் பள்ளங்கள் அஸ்திவாரங்களுக்காகத் தோண்டினார்கள்.
இந்தக் கொடுமைகளை அன்றாடம் இரவு பகலாகக் கண்டு உள்ளம் பதைத்த – பெருவெளிக்குப் பக்கத்தில் உள்ள பார்வதிபுரம் மக்கள் – 08.04.2024 அன்று, ஆண்கள், பெண்கள் அனைவரும் ஜேசிபி எந்திரங்கள் வெட்டிச் சிதைத்த ஆழமான பெரும் குழிகளுக்குள் இறங்கி நின்று கொண்டு, ”எங்கள் மீது மண்ணைத் தள்ளி இந்தக் குழிகளிலேயே எங்களைப் புதைத்து விடுங்கள்! மேலும் பள்ளங்கள் தோண்டாதீர்கள்! வேலையை நிறுத்துங்கள்!” என்று கோரினர். காவல் துறையினர் உடனே வந்து 200க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து, மண்டபம் ஒன்றில் அடைத்தனர். மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.
ஆனால், பார்வதிபுரம் திரு. கோபி (த/பெ. ராஜன்) அவர்களை முதல் குற்றம் சாட்டப்பட்டவராகப் போட்டு, பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்த மேலும் 17 பேரையும், அவர்களுக்கு ஆதரவாக நின்ற இருவர் மீதும் என இருபது பேர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் – 143, 341, 342, 353, 323, 506 (2) ஆகிய ஆறு பிரிவுகளில் காவல்துறை வழக்குப் போட்டுள்ளது. இதில் பிரிவு 353 – (அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது) மற்றும் பிரிவு 506 (2) – (வன்முறைத் தாக்குதல் மிரட்டல்) ஆகிய இரண்டும் பிணை மறுப்புப் பிரிவுகள்!
பார்வதிபுரம் அல்லாத இருவரில் ஒருவர் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் துணைத் தலைவரும், வள்ளலார் பணியகத் தலைவர்களில் ஒருவருமான க. முருகன். இன்னொருவர் வடலூரில் தர்மச்சாலை நடத்தி மக்களுக்கு உணவுத் தானம் வழங்கி வரும் திருப்பூரைச் சேர்ந்த சாது ராஜாசுப்பிரமணியன்!
இப்பட்டியலில், உள்ள இரு மகளிரும் அக்காள், தங்கைகள். இருவரும் மக்களின் நன்மதிப்பைப் பெற்றோர். ஒருவர் வள்ளலார் மெய்யியல் அறிந்த அம்மையார் கார்த்திகா. இன்னொருவர் அவரின் உடன்பிறப்பு புவனேசுவரி.
இந்த இருபது பேரும் கட்டுமான ஒப்பந்தக்காரரையும், வள்ளலார் தெய்வ நிலைய ஊழியர்களையும் ஆபாசமாகவும், இழிவாகவும் பேசினர் என்று கொச்சைச் சொற்களை முதல் தகவல் அறிக்கையில் சேர்த்துள்ளார்கள். வன்முறை நோக்கத்தோடு மிரட்டினார்கள் என்றும் காவல்துறை கூறியுள்ளது.
இது ஓர் அறப்போராட்டம்! இந்தப் பார்வதிபுரம் மக்களின் முன்னோர்கள்தாம் வள்ளற் பெருமான் அவர்களுக்கு 150 ஆண்டுகளுக்கு முன், 106 ஏக்கர் நிலம் தானமாகக் கொடுத்தவர்கள். அந்த நிலத்தை இவர்கள் திருப்பிக் கேட்கவில்லை. வள்ளலார் என்ன நோக்கத்திற்காக இந்நிலங்களைத் தானமாகப் பெற்றாரோ, அந்நோக்கத்தை – வள்ளலார் மெய்யியல் சார்ந்த பெருவெளியைச் சிதைக்காதீர்கள் என்ற அறச்சீற்றமே அவர்களின் எழுச்சி!
இக்கோரிக்கைக்காகத் தமிழ்நாடெங்கும் போராட்டங்கள் நடக்கும்போது, தங்கள் கண்முன்னால் இரவு பகலாக வள்ளலார் பெருவெளி வெட்டிச் சிதைக்கப்படுவதைக் கண்டு, நெஞ்சு பொறுக்காமல் இம்மக்கள் குழிக்குள் இறங்கி, ”எங்களை இக்குழியில் புதையுங்கள்” என்று கோரி எதிர்ப்பு முழக்கம் எழுப்பியுள்ளார்கள். இவர்களுக்கு வன்முறை நோக்கம் எதுவுமில்லை!
இந்த வழக்கில் புகார்தாரி, இந்து சமய அறநிலையத்துறையின் வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தின் செயல் அலுவலர் ஜெ. ராஜா சரவணக்குமார். ஆனால், இவர் தமது புகார் மனுவில் சம்பவம் நடக்கும்போது, தெய்வ நிலையத்தில் இல்லை என்றும், சென்னையில் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். தொலைப்பேசி செய்தி அறிந்து அன்று மாலை தான் வந்ததாகவும் தனது புகாரில் கூறியுள்ளார். நிகழ்வுகள் நடந்ததை தெய்வ நிலையத்தில் பணிபுரியும் அறநிலையத் துறை தட்டச்சர் சுரேசும், மேற்படிக் கட்டுமான ஒப்பந்தக்காரர் நாமக்கல் சரவணன் என்பவரும் தன்னிடம் கூறியவற்றை வைத்து இப்புகார் மனுவைக் கொடுப்பதாகவும் மேற்படி செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார் தமது புகாரில் கூறியுள்ளார்.
இப்புகாரில், எவ்வளவு செய்திகள் இட்டுக் கட்டப்பட்டிருக்கும், மனுவைத் தயாரிக்கக் காவல்துறையினர் என்னென்ன ஆலோசனைகள் கூறியிருப்பார்கள் என்பதை நடுநிலை யாளர்கள் ஊகித்துக் கொள்ளலாம்.
நேற்று (10.04.2024) வடலூர் பெருவெளி நுழைவு வாயில் முன்பாக, பன்னாட்டு மையத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் என் தலைமையில் நடத்த வந்த வள்ளலார் பணியகம் – தெய்வத் தமிழ்ப் பேரவை மற்றும் சன்மார்க்க சபைகள் முதலிய அமைப்புகளைச் சேர்ந்தோரை ¾ கிலோ மீட்டருக்கு முன்பாகவே வழி மறித்துக் காவல்துறையினர் கைது செய்து மண்டபத்தில் அடைத்தார்கள். மண்டபத்தில் காவல் துறையினர் எண்ணிச் சொன்ன கணக்கின்படி 353 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
வள்ளலார் பெருவெளியை சிதைப்பதைத் தடுக்கப் பெருகி வரும் மக்கள் உணர்வுகளையும், வள்ளலார் அன்பர்களின் விரிவடைந்து வரும் போராட்டங்களையும் கணக்கில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களை மதிக்கும் உணர்வோடு, வள்ளலார் பெருவெளியில் பன்னாட்டு மையம் கட்டுவதைக் கைவிட வேண்டும் என்றும், தோண்டப்பட்ட குழிகள் அனைத்தையும் மூடிச் சமப்படுத்த வேண்டும் என்றும், பார்வதிபுரம் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்றும், தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
என்று தெரிவித்திருந்தார்.