பெங்களூரூ:
அண்ணாமலை பயணித்த ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக கர்நாடக காங்கிரஸ் வேட்பாளர் புகார் அளித்துள்ளார்.
கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க., காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் கர்நாடகாவுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாலை ஹெலிகாப்டரில் பயணம் செய்தார். அவர் பயணம் செய்த அந்த ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாகவும், இதனை வாக்காளர்களுக்கு வழங்க பாஜக திட்டமிட்டதாகவும் தகவல் பரவியது.
இதுதொடர்பாக கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் கப்பு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வினய் குமார் தெரிவிக்கையில், அண்ணாமலை பயணித்த ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததாகவும், இதனை கப்பு தொகுதி வேட்பாளர்களுக்கு வழங்க உள்ளதாகவும் எனக்கு தகவல் வந்தது.
இந்த தகவல் உண்மை என்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கும், எஸ்.பியிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்துக்கும் முறையிடப்பட்டுள்ளது என்றார்.