ஒவ்வொரு ஆண்டும் காலநிலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. மழை எப்போது பெய்யும், பனி எந்த அளவுக்கு அதிகமாக இருக்கும், வெய்யிலின் தாக்கம் எத்தனை டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு அதிகரிக்கும் என்பதை எளிதாக கணிக்க முடியவில்லை. இந்த ஆண்டு மழையின் தாக்கத்தைவிட பனியின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. இதே தற்போது கோடை காலமும் பிறந்துவிட்டது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வானிலை அறிக்கையும் இன்று வெளியின் தாக்கம் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும், நாளை இவ்வளவு அதிகரிக்கும் என்று தனது ஆய்வறிக்கையை அளித்துக் கொண்டே இருக்கிறது. அதன்படியே வெளியே நடக்க முடியாத அளவிற்கு இப்போதே கோடை வெப்பம் சுட்டெறிக்கத் தொடங்கிவிட்டது.
இந்தியாவில் வெப்ப நிலை பதிவு செய்ய தொடங்கிய 1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடப்பு ஆண்டு பிப்ரவரியில் மிகக் கடுமையான வெப்பம் பதிவாகியிருந்தது. அக்கனி நட்சத்திர வெயில் தொடங்குவதற்கு முன்பே வெயில் தகிக்க தொடங்கியிருக்கிறது.
அந்த வகையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பின்பற்ற வேண்டிய எளிய சில வழிமுறைகளை காணலாம்.
- வெயிலில் அதிக நேரம் செல்ல வேண்டிய நிலைமை இருந்தால் வெப்பத்தை தடுக்கும் பருத்தி, போன்ற ஆடைகளை அணியுங்கள். அடர் நிறம் மற்றும் இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிருங்கள்.
- போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
- மதுபானம் அருந்துவதை முற்றிலும் தவிருங்கள். மது அதிகம் அருந்தினால் நீரிழப்பை ஏற்படுத்தும். இதனால் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகும்.
- மின்சார உபகரணங்களை அதிகமாக பயன்படுத்தாதீர்கள். அவையும் வெப்பத்தை உருவாக்கி வீட்டின் வெப்பநிலையை அதிகரித்துவிடும்.
- முகம் மற்றும் கண்களை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க தொப்பி, கண்ணாடி அணியுங்கள்.
- வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். சூரிய வெப்பத்தில் இருந்து சற்று நம்மை காப்பாற்ற இது உதவும்.
- வெயில் காலத்தில் ஏற்படும் தலைச்சுற்றல், குமட்டல், உடல் சோர்வு, உடல் பலவீனம் போன்ற அறிகுறிகளை அலட்சியப் படுத்தாதீர்கள். அவை வெப்ப பக்கவாதத்திற்கான எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம். தேவைப்பட்டால் மருத்துவ உதவியை நாடுங்கள்.
- காரில் குழந்தைகளை அழைத்து செல்வதாக இருந்தால் காரிலேயே அதிக நேரம் செலவிட அனுமதியுங்கள். வெளிப்புற வெப்பநிலை அவைகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
- மொட்டை மாடி போன்ற கான்கிரீட் தளம் கொண்ட மேற்பரப்புகளில் அதிக நேரத்தை செலவிடாதீர்கள். அவை சூரியனின் கதிர்களை அதிகம் பிரதிபலிக்கும். உங்கள் உடலை சட்டென்று வெப்பமாக்கிவிடும்.
- பகல் வேளையில் வீட்டின் ஜன்னல்களை மூடிய நிலையில் வைக்காதீர்கள். ஏனெனில் இது வெப்பத்தை அதிகப்படுத்தி அறையை இன்னும் சூடாக மாற்றும். * வெயில் காலத்தில் நீர் நிலைகளில் நீந்துவது உடலை இதமாக்கும். எனினும் பாதுகாப்பான சூழல் கொண்ட நீர்நிலைதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். * வெயில்படும்படியான இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் உலோகப் பொருட்களைத் தொடாதீர்கள். அவை அதிக வெப்பமடைந்து தீக்காயங்களை ஏற்படுத்தும்.
- காலை, மாலை வேளைகளில் குளிர்ந்த நீரில் குளிக்கவும்
- கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், செரிமானம் ஆவதற்கு கடினமான உணவுகளை உண்ணாதீர்கள். இது உடலின் வெப்பநிலையை அதிகரிக்க செய்துவிடும்.