சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.44,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 11ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.43,856க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து கொண்டே இருந்தது. அதாவது, 12ம் தேதி சவரன் ரூ.44,000, 13ம் தேதி ரூ.44,296, 14ம் தேதி ரூ.44,360, 15ம் தேதி ரூ.44,400 என்று தங்கம் விலை விற்பனையானது. தொடர் விலையேற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சி அடைய செய்தது.
16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் எந்தவித மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது. 17ம் தேதி தங்கம் விலை பெயரளவுக்கு குறைந்தது. அதாவது சவரனுக்கு ரூ.112 குறைந்து ஒரு சவரன் ரூ.44,288க்கு விற்கப்பட்டது. இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. மறுநாளே தங்கம் விலை உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,550க்கும், சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,400க்கும் விற்கப்பட்டது. இவ்வாறு ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்த வந்த நிலையில் நேற்று மேலும் அதிகரித்தது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,610க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,880க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.44,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,570-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ.82-க்கு விற்பனையாகிறது. இதனால் நகை வாங்குவோர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.