சென்னை:
ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நடிகரும் பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷை இந்தியா அழைத்து வர பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி, லட்சக்கணக்கானோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். குறிப்பாக ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பணத்தை முதலீடு செய்தனர். அதிகாரிகளும் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக பொதுப்பணித்துறை, பதிவுத்துறை, வணிக வரித்துறை, காவல்துறையைச் சேர்ந்த பலரும் முதலீடுகளை செய்துள்ளனர்.
ஆரம்பத்தில் ஒரு சில குறிப்பிட்ட ஆட்களுக்கு முதலீட்டுக்கான பணத்தை திருப்பிக் கொடுத்தனர். சிலருக்கு சொகுசு கார், பங்களா கொடுத்தனர். இதைப் பார்த்ததும் தாங்களும் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று கருதி தங்களிடம் இருந்த நகை, சொத்துக்களை அடமானம் வைத்தும், விற்பனை செய்யும் வந்த பணத்தை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.ஆனால், முதலீட்டாளர்களுக்கு பணத்தை நிறுவனம் திரும்ப செலுத்தவில்லை.
இதையடுத்து, பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற ரூ.2,438 கோடியை மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகார் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை கூடுதல் டிஜிபி அபின் தினேஷ் மோடக், ஐஜி ஆசியம்மாள், எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கிடல் தொடர்புடைய மேலாண் இயக்குனர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகினர். இந்நிலையில், அந்நிறுவனத்தின் இயக்குனரும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியுமான ஹரீஷ் மற்றும் மற்றொரு இயக்குனரான மாலதி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரம் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
இந்த வழக்கில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ரூசோ என்பவரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், நடிகரும் பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ், என்பவரிடம் வழக்கை மத்திய அரசின் மூலம் ஒன்னும் இல்லாமல் செய்வதற்காக ரூ.12 கோடி கொடுத்துள்ளனர். அந்தப் பணத்தைக் கொண்டு உயர் அதிகாரிகளை வளைக்க திட்டமிட்டிருந்தார்.
ஆனால் பொருளாதாரக் குற்றப்பிரிவில் நேர்மையான அதிகாரிகள் பணியாற்றுவதால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் பணத்தை வாங்கிய ஆர்.கே.சுரேஷ், அதோடு ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதை தனது வாக்குமூலத்தில் ரூசோ கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், மோசடி பணமான ரூ.12 கோடியை வாங்கிய சுரேஷை விசாரிக்க போலீசார் தேடினர். ரூசோ கைதான தகவல் வெளியானதும், ஆர்.கே.சுரேஷ், துபாய்க்கு தப்பி ஓடிவிட்டார். இதனால் அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக ரெட்கார்னர் நோட்டீசை, இன்டர்போல் மூலம் வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ராஜசேகர், அவரது மனைவி ஆகியோரும் துபாயில் தலைமறைவாக உள்ளனர். இதனால் அவர்களை கொண்டு வரவும் ரெட்கார்னர் நோட்டீஸ் கொடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவர் கைது செய்யப்பட்டால் மேலும் பல பாஜக நிர்வாகிகள் சிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் ஆர்.கே.சுரேஷ், வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்ய பாஜக நிர்வாகிகள் வேறு யாரிடமாவது பணத்தைக் கொடுத்துள்ளனரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் ஆர்.கே.சுரேஷை இந்தியாவுக்கு அழைத்து வர பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில் நடிகர் ஆர்.கே.சுரேஷ், பாஜக நிர்வாகிகள் அண்ணாமலை, திருச்சி சூர்யா உள்ளிட்டோருடன் இருக்கும் புகைப்படங்களை பாஜக நிர்வாகிகளே சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு