கோவை:
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் பணநாயமேக ஜெயித்துள்ளது. 2024 நாடாளுமன்ற தேரதலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4ம் தேதி காலமானார். இதனையடுத்து பிப்.27ம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக கூட்டணி சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேகனா நவனீதன் ஆகியோர் என மொத்தம் 77 பேர் போட்டியிட்டனர்.
தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,27,537 ஆக இருந்த நிலையில் 1,70,192 பேர் (74.79%) வாக்களித்தனர். இதனையடுத்து நேற்று 15 சுற்றுகளாக நடந்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
“திரிபுரா, நாகாலாந்தில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்த அளவில் ஜனநாயகம் வெல்லவில்லை. பணநாயகம்தான் வெற்றி பெற்றிருக்கிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட தேதி தொடங்கி வாக்காளர்களுக்கு பணம் வாரி இறைக்கப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தாங்கள் கடந்த 21 மாத ஆட்சியில் சம்பாதித்த பணத்தை தண்ணீர் போல வாரி இறைத்து ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ளனர். இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்திருந்தால் திமுக வெற்றி பெற்றிருக்காது. அதிமுகதான் வெற்றி பெற்றிருக்கும். இந்த தேர்தலில் நடந்த விதி மீறல்கள் போல வேறு எந்த தேர்தலிலும் நடக்கவில்லை. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த திமுக வெற்றி பெற்றிருக்கிறது. தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம்தான். எனவே இந்த தேர்தலை வைத்துக்கொண்டு திமுக மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தினமும் காலை மக்களை ஆடு, மாடுகளை அடைத்து வைப்பது போல பட்டிக்கும், சுற்றுலாவுக்கும் அழைத்து செல்வதால் எங்களால் வாக்காளர்களை பார்க்க முடியவில்லை. வாக்காளர்களை சுயமாக வாக்களிக்கவிடவில்லை. மக்களை நேரில் பார்த்தால்தானே வாக்கு கேட்க முடியும்? வாக்காளர்களை அபகரித்துதான் இந்த வெற்றியை திமுக பெற்றிருக்கிறது. எனவே இது ஒரு அதிசயமான தேர்தல். தேர்தல் ஆணையம் என்று ஒன்று இருக்கிறதா? இல்லையா? என்று தெரியவில்லை. இப்படியான தேர்தல்கள் ஜனநாயகத்திற்கு பேராபத்தாகும்“ என்று கூறியுள்ளார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு