என்னைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மிகவும் பொல்லாதவன் என்றோமிகப் பெரும் தலைவன் என்றோ சிலர் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கலாம்.எதுவாக இருந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல்
உண்மையிலேயே நான் யார்,நான் என்ன பேசினேன்,என்ன எழுதினேன்,என்ன சிந்தித்தேன்,எதற்காகப் போராடினேன்,
எப்படி வாழ்ந்தேன் என்று நீங்களாகவே நேரடியாகத் தேடி அறிந்துகொண்டு,
ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன்.தேவை என்றுபட்டால் நான் சொன்னதில் எதையேனும் சிந்தித்துப் பாருங்கள்.
தேவை இல்லை என்று தோன்றினால் தாமதிக்காமல் ஒதுக்கிவிடுங்கள்,
என் வழியும் அதுதான்.உங்கள் ஜாதி ஒரு மனிதனைத் தடுத்து நிறுத்தி,
உன். அம்மா யார்,உன் அப்பா யார்,உன் தாத்தா, பாட்டி எல்லாம் யார்,
அவர்கள் பின்னணி என்னஎன்றெல்லாம் விசாரணை நடத்துகிறது.அதன் பிறகே அந்த மனிதனை மதிப்பதா வேண்டாமா என்று முடிவெடுக்கிறது. அப்படிப்பட்ட மோசமான ஜாதி என் பக்கத்தில் மட்டுமல்ல, எந்த ஒரு மனிதனுடைய பக்கத்திலும் நெருங்கி வரக் கூடாது என்பேன்.உங்கள் மதம் இன்னொரு மதத்தை உளமாற வெறுக்கக் கற்றுக் கொடுக்கும் என்றால்; வேறு மதங்களை நம்புபவர்களையோ ஒரு மதத்தையும் நம்பாதவர்களையோ பழிக்கும் என்றால்;அப்படி ஒரு மதத்தைப் பின்பற்றுவதால் வரும் புண்ணியமோ பலனோ எனக்கு வேண்டாம் என்று அடித்துச் சொல்வேன்.மற்றபடி எனக்கும் கடவுளுக்கும்
எந்தக் கொடுக்கல் வாங்கல் சண்டையோ பூர்வ ஜென்மத்துப் பகையோ இல்லை.என் நாட்டில் சிலருக்கு மட்டும்தான் சுதந்திரம் உண்டு, வேறு சிலருக்கு இல்லை என்றால்; சிலரே இந்தியர்கள் வேறு சிலர் அந்நியர்கள் என்றால்;ஏழைகள் ஏழைகளாகவே நீடிப்பார்கள் என்றால்;பெண்கள் ஆண்களுக்குச் சமமாக நடத்தப்பட மாட்டார்கள் என்றால்;ஒருவரால் அச்சமின்றி எழுதவோ பேசவோ முடியாது என்றால்;
இந்தக் குறைகளை எல்லாம் சுட்டிக்காட்டுவது தேச துரோகம் என்றால்;நான் என்ன செய்தாலும்நீ என் பக்கம் தான் நின்றாக வேண்டும் என்று என் நாடு என்னிடம் எதிர்பார்க்கும் என்றால்; அப்படியொரு நாட்டின் மீது எனக்குப் பற்று இல்லை என்பேன்.என் மொழி அறிவை வளர்க்கிறதா? அறிவியல் சிந்தனையை
ஊக்கப்படுத்துகிறதா?பரந்த மனத்தோடு உலகம் எங்கிலும் இருந்து வெளிச்சத்தைப் பெற்றுக் கொள்கிறதா?பதிலுக்கு எல்லோருக்கும் தன் கதவு களைத் திறந்து விடுகிறதா?
வேறு பாடின்றி எல்லோரையும் அணைத்துக் கொள்கிறதா என்றெல்லாம் கவனமாகப் பார்த்துக்கொண்டிருப்பேன்.இல்லை என்று தெரிந்தால் அந்தக் கணமே என் மொழிப்பற்றை உதறிவிடுவேன்.கோயிலில் சிலர் நுழையலாம்,
வேறு சிலர் நுழையக்கூடாது என்று சொன்னால், அப்படி ஓர் இடம் எனக்குத் தேவையில்லை என்று என் வழியில் போய்விடுவேன்.கடவுளோ காந்தியோ நேருவோ அல்லது வேறொரு மகானோ,யாராக இருந்தாலும் ஒருவர் செய்வது தப்பு என்று என்
மனதுக்குப் பட்டால் தப்பு என்றே அடித்துச் சொல்வேன்.மனிதர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் பிற்போக்குத்தனமான கருத்து என்று தெரிந்துவிட்டால் அது எவர் வாயில் இருந்து வந்திருந்தாலும் அதை வலுவாக எதிர்ப்பேன்.ஒரு மனிதனை மதிக்கத் தெரியாத எந்தத் தத்துவமும்,
எந்தக் கோட்பாடும்,
எந்தப் படைப்பும்,
எந்தக் கலையும், எந்த ஓவியமும்,
எந்தஇசையும்,
எந்தவழிபாடும்,
எந்தப் பண்பாடும்,
எந்தப் பெருமிதமும்,
எந்த வாழ்க்கைமுறையும் எனக்கு வேண்டாம்.எல்லாவற்றையும் வேண்டாம் வேண்டாம் என்று ஒதுக்குகிறாயே,
உனக்கு என்ன தான் வேண்டும் என்று எரிச்சலோடு கேட்கிறார்கள்.ஒவ்வொரு மனிதனும் தன்மானமும் அறிவும் பெற்று வாழ வேண்டும் என்று விரும்புகிறேன்.அதற்குக் குறுக்கே வரும் சக்திகள் என்னவாக இருந்தாலும் ஒன்று விடாமல் அவை அனைத்தையும் எதிர்க்கிறேன்.எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இந்த ஒரு வேலையைத்தான் செய்து வருகிறேன். நினைவு தப்பும் காலம் வரும் வரை இந்த ஒன்றைத்தான் செய்வேன்.எனக்குப் பிறகு நான் பேசிய ஒவ்வொரு பேச்சும் நான் எழுதிய ஒவ்வொரு சொல்லும் என் வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும்.இதை எல்லாம் செய்ய நான் யார் என்றால்?பலவற்றைப் படித்தவன் என்றோ பெரிய பண்டிதன் என்றோ மாபெரும்சிந்தனையாளன் என்றோ கருதிக்கொண்டு நான் பொதுவாழ்க்கைக்கு வந்துவிட வில்லை.வேறு யாரும் கண்டுகொள்ளாததால்,நானே இந்தப் பணியை எடுத்து மேலே போட்டுக் கொண்டு செய்ய ஆரம்பித்து விட்டேன்.இதில் விருதோ மதிப்போ கிடைக்காது என்று தெரியும். ஒருவர் பாக்கியில்லாமல் எல்லோரையும் பகைத்துக்கொள்ள வேண்டியிருக்கும்;ஒவ்வொருவரிட மிருந்தும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரிடும் என்றும் – தெரியும்.தெரிந்தேதான் வந்தேன். நானே எழுதி, நானே அச்சுக்கோத்து, நானே அச்சடித்து, நானே படிக்க வேண்டியிருந்தாலும் பரவாயில்லை , எழுதுவோம் என்றுதான் எழுத ஆரம்பித்தேன்.ஒருவர் காதிலும் விழா விட்டாலும் பரவாயில்லை என்று வீதிக்கு நடுவில் நின்றுகொண்டு உரக்கப் பேசஆரம்பித்தேன்.நீங்கள் என்னை என்னதான் சொன்னாலும், என்ன தான் செய்தாலும் உங்கள் ஒருவர் மீதும் தனிப்பட்ட முறையில் ஒரு துளி கோபமோ வெறுப்போ கொள்ளமாட்டேன்.வலிக்குமே என்று அஞ்சிக்கொண்டு இருக்காமல் ஒரு மருத்துவர் எப்படி உங்களுக்கு ஊசி போடுகிறாரோ, தேவைப்பட்டால் எப்படி அறுவைசிகிச்சை செய்கிறாரோ அப்படியே நானும் அதிக உரிமை எடுத்துக்கொண்டு உங்களை எல்லாம் விமர்சிக்கிறேன் என்று எடுத்துக்கொள்ளுங்கள்.உங்கள் ஒவ்வொரு வரையும் நான் அளவுகடந்து நேசிக்கிறேன்.
தீங்கு விளைவிக்கும் எந்தக் கிருமியும் உங்களை அண்டிவிடக் கூடாது என்பதற்காகத்தான் உங்களை எந்நேரமும் கவனித்துவருகிறேன்.நாக்கில் தழும்பு ஏறும்வரை உங்களுக்காகப் பேசுவேன்.கை சாய்ந்து கீழே தொங்கும்வரை உங்களுக்காக எழுதுவேன்.கால்கள் துவளும்வரை உங்கள் பட்டித் தொட்டிகளில் எல்லாம் நடப்பேன்.எனக்கு உண்மை என்று பட்டதை நான் நம்புவதைப் போல், நீங்களும் உங்களுக்கு உண்மை என்று பட்டதை நம்புங்கள்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு