எது பகுத்தறிவு?
பகுத்தறிவு என்பது நன்மை எது? தீமை எது என்று பகுத்து அறியும் அறிவு என்ற விளக்கம் கொடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு உயிரினமும் தன்னுடைய உயிர் வாழ்க்கைக்கு நன்மை பயக்கக்கூடியது எது? தீமை பயக்கக்கூடியது எது என்று பகுத்து அறிந்து அந்த அறிவின் வழி செயல்படுகின்ற காரணத்தாலேயே அவை உலகில் அழிந்து போகாமல் நிலைநிற்கின்றன.
எடுத்துக்காட்டாக, ஒரு நாயை எடுத்துக்கொள்வோம். அது தான் உண்ணத்தக்கப் பொருள் எது, தள்ளத்தக்கப் பொருள் எது? என்பதைப் பகுத்து அறிந்து உண்ணத்தக்கப் பொருளை மட்டுமே உண்ணுகின்றது. தள்ளத்தக்க பொருளை பகுத்தறிந்து தள்ளிவிடுகின்றது. ரொட்டியைப் போன்று வண்ணத்திலும், வடிவிலும் மெழுகினால் செய்து நாய்க்குக் கொடுத்தால் அது ரொட்டி எது? மெழுகு எது என்று பகுத்து அறிகின்ற அறிவினால் மெழுகைத் தள்ளி விடுகின்றது. ரொட்டியை மட்டுமே ஏற்று உண்ணுகின்றது.
அவ்வாறே ஓரறிவு உயிரினங்களாகிய மரம், செடி, கொடி, புற்பூண்டு முதலியன தம்முடைய உயிர்வாழ்க்கைக்கு வேண்டிய தண்ணீரைப் பெறுவதற்குத் தண்ணீர் இருக்கும் இடத்தை நோக்கி வேரை வளரச் செய்கின்றன. மற்ற மரங்களிடையே வளரும் தென்னை மரம், சூரிய ஒளியைப் பெற்றுக்கொள்வதற்காக மிகுந்த முயற்சி எடுத்து சூரிய ஒளி கிடைக்கும் திசையை நோக்கி வளைந்து, வளைந்து வளர்ந்து செல்லுகிறது. இவையெல்லாம் பகுத்து அறியும் அறிவோடு சேர்ந்த அறிவு இல்லையா? தங்கள் வாழ்வுக்கு நன்மையானது எது? தீமையானது எது? என்று பகுத்து அறியும் அறிவு இருப்பதால் தானே இவ்வாறு செயல்புரிகின்றன என்று நாம் எண்ணலாம். இந்த எண்ணத்தின் அடிப்படையில் மனிதனுக்கு மட்டுமே ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு இருக்கின்றது என்பதைக் கேள்விக்குறி ஆக்கலாம்.
மனிதனுக்கு ஆறாவது அறிவுக்குரிய உறுப்பும் இல்லை, ஆறாவது அறிவுக்குரிய சிறப்பும் இல்லை என்றால் மற்ற ஐந்தறிவுடைய விலங்குகளைப் போன்று இவனும் ஓர் ஐந்தறிவுடைய விலங்குதானா என்ற கேள்வி எழும்புகின்றது. ‘Man is a Social Animal’ என்ற முதுமொழி அவனை ஒரு விலங்காகவே காட்டுகின்றது.