திருப்பூர்:
மின்சாரத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், மின்சார வாரிய சேர்மேன், தமிழ்நாடு காவல் துறை தலைவர், திருப்பூர் மாநகர காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கும் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொது செயலாளர் ஈ.பி.அ.சரவணன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் வடக்கு மாநகர பகுதியான பாண்டியன் நகரிலுள்ள பூண்டி காவல் நிலைய காவலர்கள் மின்சார வாரிய ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசியதும், பணம் பறித்த சம்பவமும் மின்சார வாரிய பணியாளர்கள், ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மின்வாரியத்தில் இரவு பகலாக பணியாற்றும் ஊழியர்கள், குறிப்பாக மின்சார வாரிய அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட களப்பணியாளர்கள், மின் அளவீடு செய்யும் கணக்கீட்டு பணியாளர்கள் ஆகியோர் தொடர்ந்து காவல்துறையினரால் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மூன்றில் இரண்டு பகுதிகளில் களப்பணியாளர் காலியிடங்கள் உள்ளன. கொரோனா ஊரடங்கு போன்ற காலத்திலும் தங்கள் உயிரை துச்சமென மதித்து மின் பணியாளர்கள் பணியாற்றினர். கொரோனாவுக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட மின் வாரிய பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். திருப்பூர் போன்ற வளர்ந்த நகரங்களில் மின் ஊழியர்கள் நீண்ட தொலைவிலிருந்து வந்து பணியாற்றுகின்றனர்.
திருப்பூர் வடக்கு பகுதிகளிலுள்ள பாண்டியன் நகரில் இரவில் மின்சார பணிகளுக்கு சென்ற ஊழியர்களை பூண்டி காவல் நிலைய காவலர்கள் வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசி அநாகரீகமாக நடந்துகொண்டனர். மேலும் ஊழியர்களின் சட்டை பாக்கட்டில் இருந்த ரூ.1700 பணத்தை பறித்துள்ளனர். அப்போது பூண்டி காவல் நிலைய காவலரிடம் நாங்கள் மின்சார வாரிய ஊழியர்கள் இரவில் அவசர பணிகளுக்கு சென்று இப்போது தான் வீடு திரும்புகிறோம் என தெரிவித்த பின்னரும் மிகவும் ஆபாசமாக பேசி அனுப்பியுள்ளனர்.
கடந்த 19 ம் தேதி காலை இச்சம்பவம் தொடர்பாக பாண்டியன் நகரிலுள்ள மின்சார வாரிய அலுவலக தலைவரிடம் சம்பந்தப்பட்ட மின்சார வாரிய ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாண்டியன் நகரிலுள்ள மின்சார வாரிய அலுவலக போர்மேன் உள்ளிட்ட அலுவலர்கள் நேரடியாக பாண்டியன் நகரிலுள்ள பூண்டி காவல் நிலைய சோதனை சாவடிக்கு சென்று, பூண்டி காவல் நிலைய காவலரிடம் கேட்ட போது, மின்சார வாரிய போர்மேன் என்று கூட பார்க்காமல் மரியாதை இல்லாமல் பேசி வழக்கு போட்டு உள்ளே தூக்கி போட்டுவேன் என்றும் மிரட்டினார்.
மின்சார வாரிய தொழிலாளர்களை ஒரு சில காவலர்கள் தாக்குவதால் மற்ற பணியாளர்கள், தொழிலாளர்கள் பணிக்கு வர அஞ்சுகின்றனர். பாதுகாப்பு என்ற பெயரில் பணிக்கு செல்லும் மின்வாரிய தொழிலாளர்களை தாக்குவதும், குற்றவாளி போன்று நடத்துவதையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மின் உற்பத்தியும், மின் வினியோகமும் தடைபட்டால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
எனவே தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் காவல் துறை உயர் அதிகாரிகளும் இதில் உடனடியாக தலையிட்டு சம்பந்தபட்ட பூண்டி காவல் நிலைய காவலர்கள் மீது உரிய சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து அத்தியாவசிய பணிகளில் பணியாற்றும் மின்சார வாரிய அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட களப்பணியாளர்களின் பணி பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு