தமிழ்நாட்டின் முன்னணி மின் வாகன தொழில்நுட்ப நிறுவனமான கேலிபர் கிரீன் வெகிகிள்ஸ் லிமிடெட், ஐதராபாத்தை தலைமையகமாகக் கொண்ட குவாண்டம் எனர்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரான், மிலன், ப்ஜினெஸ் ஆகிய 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர்கள் கொரிய தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகின்றன. எலக்ட்ரான் மற்றும் மிலன் ஸ்கூட்டர்களில் 1,000 வாட் திறன் கொண்ட மோட்டார் உள்ளது.
அதிகபட்சமாக மணிக்கு 60 கிமீ வேகத்தில் செல்லும். 1,200 வாட் மோட்டார் திறன் கொண்ட ப்ஜினெஸ், டெலிவரி வாகனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக மணிக்கு 50 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. தமிழ்நாட்டில் ஷோரூம் விலையாக எலெக்ட்ரான் மற்றும் மிலன் சுமார் ரூ.92,888 ம் ஜின்கா ப்ஜினெஸ் ரூ.96,056 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட 3 ஸ்கூட்டர்களிலும் மேம்பட்ட லித்தியம்-அயன் பேட்டரிகள் உள்ளன. இவற்றை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் ஆகும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கிமீ முதல் 120 கிமீ தூரம் வரை செல்லலாம். மாடலுக்கு ஏற்ப இது மாறுபடும். மேலும் இந்த நிறுவனம் 1500 வாட் மோட்டார் கொண்ட பிளாஸ்மா ஸ்கூட்டரை அடுத்த ஆண்டு மார்ச்சில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.