சுரீர் – சொற்களம்
மோடி – இராகுல் பங்காளி சண்டையில்
தமிழர்கள் எந்த பக்கம்?
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன்
காங்கிரசுத் தலைவர் இராகுல் காந்தி வெளிநாடுகள் போகும் போது அங்கு வசிக்கும் இந்திய நாட்டு குறிப்பாக வடநாட்டு மக்களிடம் – மாணவர்களிடம் பா.ச.க., வுக்கு எதிரான அரசியல் பேசி வருகிறார். அப்படி வெளிநாட்டில் இந்தியாவின் உள்நாட்டு அரசியல் குறித்து விமர்சனம் செய்ய இராகுலுக்கும் – இந்திய குடிமக்களுக்கும் உரிமை உண்டா எனில் உண்டு என்பதே தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் நிலைப்பாடு!
ஆனால் பா.ச.க. கட்சி, இராகுல் அயல்நாட்டில் – அமெரிக்காவில் இந்திய அரசை விமர்சிப்பது “தேசத் துரோகம்” என்று பேசி வருகிறது.
இந்த இரு முகாம் விவாதங்களில் தமிழர்கள் எந்த பக்கம் இருக்க வேண்டும்?
காங்கிரசு – பா.ச.க. – கட்சிகளின் இரண்டு பக்கத்தையும் தவிர்த்து விட்டு மூன்றாவது பக்கம் தான் தமிழ்நாட்டுத் தமிழர்கள் நிற்க வேண்டும்! ஏன்?
“கடந்த 2020 ஆம் ஆண்டு சீனப் படைகள் நமது லடாக் பகுதியில் நமது தலைநகர் தில்லி அளவுக்கான இந்திய பரப்பைக் கைப்பற்றிக் கொண்டது. இது ஒரு பேரிழப்பு. இந்திய எல்லைப் பகுதியில் சீனப் படையாட்கள் இருப்பது கவலை அளிக்கிறது” என்று இராகுல் 11.09.2024 அன்று வாசிங்கடனில் கூறி துயரப்பட்டுள்ளார்.
இதே இராகுல் இந்திய பெருங்கடலில் இந்தியப் பகுதியை – தமிழ் நாட்டுப் பகுதியை சிங்களக் கப்பற் படை நிரந்தரமாக ஆக்கிரமித்துக் கொண்டு, தமிழ்நாட்டு மீனவர்களை அன்றாட ம் அவர்கள் அடித்து கொல்வதையும், கடத்திக் கொண்டு போய் இலங்கைச் சிறைகளில் அடைப்பதையும், தமிழ்நாட்டு மீனவர்களை தாக்கிக் கொள்ளை அடிப்பதையும் என்றைக்காவது கண்டித்து இருக்கிறாரா?
இராகுல் காந்தியின் பாட்டி இந்திராகாந்தி, தமிழ்நாட்டின் கச்சத் தீவை சிங்கள அரசுக்குக் கொடுத்தது தவறு என்றும் அதனை மீட்க வேண்டும் என்றும் என்றைக்காவது கூறி இருக்கிறாரா? இல்லை!
தமிழர்களுக்கு எதிரான இன ஒதுக்கல் கொள்கையை மோடியும் கடைபிடிக்கிறார்; இராகுலும் கடைபிடிக்கிறார்! அவர்கள் இருவரும் தலைமை அமைச்சர் பதவிக்காக சண்டை போட்டுக் கொள்கிறார்கள் பகைவர்கள் நடத்திக் கொள்ளும் பங்காளிச் சண்டையில் தமிழர்கள் எந்த பக்கமும் சேர வேண்டியதில்லை! எச்சரிக்கையாய் இருங்கள்!
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462