மீனம்பாக்கம்:
தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று நள்ளிரவு தாய் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. முன்னதாக, இந்த விமானத்தில் பெருமளவு போதைபொருள் கடத்தி வரப்படுவதாக நேற்று மாலை சென்னை தி.நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, நேற்றிரவு முதல் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கும் வெளிநாட்டு பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். பின்னர் நள்ளிரவில் தாய்லாந்து விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது தாய்லாந்துக்கு சுற்றுலா பயணியாக சென்று திரும்பிய சென்னையில் வசிக்கும் வடமாநில வாலிபர் ஜான்ஜுட் தவாஸ் (23) என்பவர்மீது மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட அவரை விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் அவரை சென்னை விமானநிலைய சுங்கத்துறை அலுவலகத்துக்கு மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் அழைத்து சென்று, அவரது உடைமைகளை பரிசோதனை செய்தனர்.
இதில் அவர் வைத்திருந்த கைப்பைக்குள் ஒரு ரகசிய அறை இருப்பது தெரியந்தது. அதை பிரித்து பார்த்தபோது, அதற்குள் ரூ.25 கோடி மதிப்பிலான 3.6 கிலோ ஹெராயினை மறைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி ஜான்ஜுட் ஜவாசை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை தி.நகர் அலுவலகத்துக்கு கொண்டு சென்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.