“சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்டதற்கு கண்டனம்”.
மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம் அறிக்கை: நாள் 13.11.2024. சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் இன்று காலை பணியிலிருந்த புற்றுநோய் சிறப்பு மருத்துவரை, “நோயாளிக்கு முறையான சிகிச்சையளிக்கவில்லை” எனக்கூறி நோயாளியின் உறவினர்கள் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மருத்துவர் அரங்கம் வன்மையாகக் கண்டனத்தை தெரிவிக்கிறது. மேலும் குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனை அளிக்கவேண்டும் என்று மருத்துவர் அரங்கம் கோருகிறது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பாராமெடிக்கல் ஊழியர்கள் போதிய அளவில் இல்லாததும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாததும் இத்தகைய சம்பவங்கள் நடைபெற முக்கிய காரணங்களாகும். மேலும் அடிக்கடி அரசு மருத்துவர்களை குறைகூறி - மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரே, ‘நடவடிக்கை’ என்ற பெயரில் அச்சுறுத்துவதும், ஊடகங்களில் பேசுவதும், பொது மக்களிடையே மருத்துவர்கள் மீதான நம்பிக்கையை குறைத்துள்ளது. மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை மீது சந்தேகம் ஏற்படவும் இது வழிவகுக்கிறது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமலிருக்க, பணியில் உள்ள அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் முறையான பாதுகாப்பு வழங்கவேண்டும் எனவும், காலிப்பணியிடங்களை நிரந்தர மருத்துவர்களையும், ஊழியர்களையும், கொண்டு நிரப்பவேண்டும் எனவும், மருத்துவர் மற்றும் ஊழியர்கள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசை மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம் கேட்டுக்கொள்கிறது.