டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைத் தாக்கிய இந்துத்துவ அமைப்பினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் சங்கமான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தை சேர்ந்தவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் என் அன்புத்தம்பி தமிழ் நாசர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அறிவை செதுக்கும் கலைக்கூடங்களான பல்கலைக்கழகங்களை மதவெறிக் கூடங்களாக மாற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் கொடுஞ்செயல் வன்மையான கண்டளத்திற்குரியது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தை சேர்ந்த மாணவர்களின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து எல்லை மீறி வருகின்றன. கடந்த காலங்களில் வெளியிலிருந்து மதவெறி கும்பல்களைத் துணைக்கு அழைத்து வந்து படிக்கும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தச் செய்த அவ்வமைப்பினர், தற்போது தாங்களே முன்னின்று இக்கொடுந்தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.