ஆங்கிலத்தில் லைமா பீன்ஸ் என அழைக்கப்படுகிற டபுள் பீன்ஸுக்கு பெயர் காரணம் இல்லாமல் இல்லை. 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பெரு நாட்டில் முதன் முதலில் இது பயிரிடப்பட்டதாக ஒரு தகவல். அதனாலேயே இதற்கு லைமா பீன்ஸ் என்றொரு பெயர் வந்ததாம். தமிழ்நாட்டில் டபுள் பீன்ஸ் என்றால்தான் மக்களுக்குப் தெரியும். இது பட்டர் பீன்ஸ் என்றும் அழைக்கப்படும். இதை பார்ப்பதற்கு வெண்ணெய் மாதிரி இருப்பதுதான் காரணம் என்கிறார்கள். பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, ருசிக்கவும் இருக்கும் இந்த டபுள் பீன்ஸ், ஏராளமான சத்துகளை கொண்டுள்ளது.
டபுள் பீன்ஸ் இரண்டு வகைப்படும். பெரிய பீன்ஸ் 4X2.5 செ.மீ. அளவிலும் சிறிய பீன்ஸ் 3X2 செ.மீ. அளவிலும் காணப்படும். காய்ந்த பீன்ஸ் மற்றும் ஃப்ரெஷ் பீன்ஸ் இரண்டிற்கும் ஒரே மாதிரியான பலன்களே உள்ளது. விதைத்த முதல் மூன்று மாதங்களில் விளையும் பீன்ஸ் பார்க்க அழகாக சிறுநீரக வடிவில் இருக்கும் Fabaceae குடும்பத்தை சேர்ந்த இந்த வகை பீன்ஸ் மத்திய அமெரிக்காவில் விளைய ஆரம்பித்து இப்போது நாடெங்கும் குளிர்பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது.
இதை சமைக்கும் முறை: டபுள் பீன்ஸ் அதன் புரதச்சத்தின் பயனுக்காக பயன்படுத்தப்படுகிறது. மற்ற பருப்பு வகைகள் போல இது அதிகம் பயன்படுத்தாத காரணம் இதில் இருக்கும் நார்ச்சத்தின் அளவு அதிகம் என்பதாலும், இதில் உள்ள ஆக்ஸாலிக் அமிலம் சில நேரங்களில் வயிற்று வலியை உண்டாக்கலாம் என்பதாலும் தான். வாரம் இரண்டு முறை காலை மற்றும் மதிய உணவிற்கு பயன்படுத்தலாம். ஆனால், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது எளிதில் ஜீரணமாகி விடும். அதே போல் சுண்டல் போல் தனியாக வேக வைத்து சாப்பிடாமல் ஏதாவது காய்கறி அல்லது மாவுச் சத்துள்ள உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு இருக்காது. குளிர்காலத்தில் மலிவாக கிடைக்கும். அப்போது வெயிலில் உலர வைத்து பாதுகாத்து வைத்தால் வருடம் முழுவதும் பயன்படுத்தலாம்.
மருத்துவப் பயன்கள்
பச்சை மற்றும் காய்ந்த பீன்ஸ், ஃபோலேட் (Folate) எனும் உயிர்ச்சத்து நிறைந்தது. 100 கிராமில் 395 மி.கி. அல்லது 99 சதவிகிதம் இருந்து ஒரு நாளைய தேவையை தருகிறது. இந்த சத்து பி 12 வைட்டமினுடன் சேர்ந்து செல் பிரிவில் டிஎன்ஏ உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்ப காலத்தில் இந்த பருப்பு வகையை உட்கொள்வது குழந்தைக்கு நல்ல பலனை அளிக்கும். இது மிக முக்கியமான பி வைட்டமின்களான (பி1, தையமின்) பி 6 பைரிடாக்ஸின், பான்டதனிக் அமிலம், ரிபோஃபிளேவின், நியாசின் போன்ற சத்துகள் நிறைந்தது. இவை அனைத்தும் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து வளர்சிதை மாற்றம் செய்ய பெரிதும் பயன்படுபவை.
இரும்புச்சத்து, பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு சத்துகளை அதிகம் பெற்றுள்ளது. இவை அனைத்தும் நமது உடலில் Electrolyte சமநிலையில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே சர்க்கரை மற்றும் இதயநோய் உள்ளவர்கள் அவசியம் வாரம் 2 முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் பொட்டாசியத்தின் அளவு அதிகமாக உள்ளதால் சிறுநீரக நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். இதிலுள்ள மாங்கனீசு சத்து ஆன்ட்டிஆக்சிடன்ட் உற்பத்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
எப்படி தேர்வு செய்வது?
ஃப்ரெஷ்ஷான டபுள் பீன்ஸ், பச்சை பசேலென்ற நிறத்திலும், பளபளவென்றும் இருக்கும். மேலே சுருக்கங்களோ, மஞ்சள் நிறத் திட்டுகளோ காணப்படாது. உலர்ந்த டபுள் பீன்ஸை, ஈரமில்லாத டப்பாவில், காற்று புகாதபடி போட்டு வைத்து, 6 மாதங்கள் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம்.
என்ன இருக்கிறது? (100 கிராம் அளவில்)
புரதம் - 8.3 கிராம்
கொழுப்பு - 0.3 கிராம்
நார்ச்சத்து – 4.3 கிராம்
கார்போ
ஹைட்ரேட் – 12.3 கிராம்
ஆற்றல் – 8 கிலோ கலோரிகள்
கால்சியம் - 40 மி.கி.
பாஸ்பரஸ் - 140 மி.கி.
இரும்புச்சத்து - 2.3 கிராம்
மெக்னீசியம் - 25 மி.கி.
இவ்வாறாக இந்த டபுள் பீன்ஸுக்கு அளவற்ற நன்மைகள் உள்ள.