டெல்லி மதுபான கொள்கை வழக்கில், முதல்வராக இருந்தபோது கெஜ்ரிவால் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்த கடந்த 2022ல் இது குறித்து வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, இரண்டு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிய நேரத்தில் அதிரடியாக அவரை கைது செய்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.
மத்திய அரசின் விசாரணை அமைப்புகள், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக செயல்படுவதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் இருந்தன. இதனை உறுதி செய்யும் விதமாக தேர்தல் நெருங்கும் சமயத்தில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருந்தது, இந்த குற்றச்சாட்டுகளை உண்மை என்கிற விவதங்களை ஏற்படுத்தியது. கைது நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்த கெஜ்ரிவாலுக்கு, தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள சில நாட்கள் மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டது. பிரசாரம் முடிந்த பின்னர் மீண்டும் கெஜ்ரிவால் சிறை சென்றார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட வழக்கில், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தேர்தல் நெருங்கும் நேரத்தில் கைது செய்திருப்பது, எதிர்க்கட்சிகளை முடக்கவே என்று ஜெக்ரிவால் தரப்பில் நீதிமன்றத்தில வாதிடப்பட்டது. கீழமை நீதிமன்றம், உயர்நீதிமன்றம் என கடைசியாக உச்சநீதிமன்றம் சென்று கெஜ்ரிவால் ஜாமீன் பெற்றார்.
ஜாமீன் பெற்று வெளியே வந்ததும், முதல் வேலையாக தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தன்னை மக்கள் நேர்மையானவர் என்று கருதும் வரை இந்த பதவியில் தொடர மாட்டேன் என்றும் அவர் கூறியிருந்தார். இதனையடுத்து, அதிஷி புதிய முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், இன்று டெல்லி பேரவையில் அதிஷி பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறார். கடந்த 2020 சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி 62 இடங்களை கைப்பற்றியது. இதனால் இன்று பெரும்பான்மையை நிரூபிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது. பெரும்பான்மையை நிரூபித்த பின்னர், குளிர் காலத்தில் ஏற்படும் காற்று மாசை தடுப்பது குறித்த செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும், டெல்லியில் காற்று மாசு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக 21 அம்சங்களை கொண்ட செயல்திட்டம் ஏற்கெனவே முன்மொழியப்பட்டிருக்கிறது. இன்று இது குறித்து விவாதிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.