கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என்புரம் சென்னை சாலையை சேர்ந்தவர் கவர்னர் என்ற ராமு (69).,இவர் அதே பகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் கடைவைத்திருந்தார். இவருக்கு புருஷோத்தமன், பிரபாகரன், மகாலிங்கம் ஆகிய 3 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவருடன் இவரது மகன் புருஷோத்தமன், மருமகள் ஆகியோர் வசித்து வந்தனர். புருஷோத்தமன் தி.மு.க ஒன்றிய பிரதநிதியாக இருந்து வருகிறார். வழக்கம்போல நேற்று இரவு வீட்டின் முன்பு படுத்திருந்த ராமு இன்று காலை இவரது வீட்டின் பின்புறம் தோட்டத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
தோட்டத்திற்கு சென்ற ராமு மருமகள் இதனை கண்டுஅலறினார். இவரது அலறல் சத்தத்தை கேட்டுவெளியே ஓடிவந்த இவரது கணவர் புருஷோத்தமன் தனது தந்தை கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து கதறி அழுதார். தகவல் அறிந்ததும் உறவினர்கள், கிராம பொதுமக்கள் தி.மு.க.வினர் அங்குதிரண்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது.இது பற்றி பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர்கள் பண்ருட்டி கண்ணன், காடாம்புலியூர் ராஜ தாமரை பாண்டியன், நெல்லிக்குப்பம் சீனிவாசன், புதுப்பேட்டை நந்தகுமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலையான ராமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடலூரில் இருந்து போலீஸ் மோப்பநாய் கூப்பர் வரவழைக்கப்பட்டது. போலீஸ் மோப்பநாய் சம்பவ இடத்திலிருந்து மோப்பம் பிடித்துக்கொண்டு சிறிதுதூரம் ஓடியது. யாரையும் கவ்விபிடிக்கவில்லை. இந்த கொலை சம்பவம் இடப்பிரச்சனை காரணமாக நடந்திருக்குமா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா?என்பது குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.