தூத்துக்குடி மாவட்டம் சேரகுளம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சேரகுளம் கிராமத்தில் சோமசுந்தரேஸ்வரர் நித்திய கல்யாணி சிவன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் இருந்த நடராஜர், சிவகாமி, தேவி உள்ளிட்ட மூன்று உலோக சிலைகளை கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி இரவு மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து கோவில் பூசாரி ஐயப்பன் கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் தேதி சேரகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சமீம்பானு, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், தலைமை ஏட்டுகள் சிவபாலன், செல்வகுமார், போலீசார் செல்லக்கனி உள்ளிட்ட தனிப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் புலன் விசாரணையில் செல்லதுரை, கணேசன், மாரியப்பன், முத்து என்கிற வேம்படி முத்து, ராமகிருஷ்ணன் என்கிற தாஸ், சண்முக வேலாயுதம், முருகன், பாலமுருகன், சங்கர், தினகரன், சதீஷ்குமார் ஆகிய 11 பேர் சேர்ந்து 3 உலோக சாமி சிலைகளையும் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 11 பேரையும் போலீசார் கைது செய்து அவர்கள் சோமசுந்தரேஸ்வரர் சாமி கோவிலில் இருந்து திருடி வைத்திருந்த 3 உலோக சாமி சிலைகளை மீட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2015ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி இந்த வழக்கின் இறுதி அறிக்கையை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி இந்த வழக்கு கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த காலத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த முருகன் மற்றும் தினகரன் ஆகிய இருவரும் இறந்து விட்டனர். ராமகிருஷ்ணன் என்கிற தாஸ் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமுறை ஆனதால் அவரை இந்த வழக்கிலிருந்து தனியாக பிரித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில் கடந்த மாதம் (பிப்ரவரி) 27ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் குற்றம் நிரூபிக்கப்பட்ட செல்லதுரை, கணேசன், மாரியப்பன், முத்து என்கிற வேம்படி முத்து, ராமகிருஷ்ணன் என்கிற தாஸ், சண்முக வேலாயுதம் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதேபோல் பாலமுருகன், சங்கர், சதீஷ்குமார் ஆகிய மூன்று பேருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.2000 அபராதமும் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.