கும்பகோணம் வட்டம், நாகரசம்பேட்டை அழகு நாச்சியம்மன் கோவில் துாக்கு தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
நாகரசம்பேட்டையிலுள்ள அழகுநாச்சி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் துாக்குத்தேர் திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கடந்த மாதம் 25-ம் தேதி அன்று காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கி, சுவாமி வீதியுலா நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான தூக்குத் தேர் திருவிழா மாலை நடைபெற்றது. அழகு நாச்சிஅம்மன் திருத்தேரில் எழுந்தருள சுமார் 3 டன் எடை கொண்ட தேரை 15 தினங்கள் விரதமிருந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள், நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் தங்களது தோளில் சுமந்து கொண்டு, அனைத்து தெருக்களுக்கு சென்று, பின்னர் வயல்களின் வழியாக ஊர் எல்லையான மேலவிசலூர், கிளக்காட்டியிருப்பு கிராமங்கள் வழியாக சென்று மீண்டும் அதே வழியாக கோயிலை சென்றடைந்தனர்.
தூக்கு தேர் திருவிழா இப்பகுதியில் மட்டும் நடைபெறுவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகரசம்பேட்டை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.