நான் மகாராஷ்டிரா கவர்னராக நியமிக்கப்படலாம் என்று ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் ஊகம் என்று கேப்டன் அமரீந்தர் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
பஞ்சாபின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கேப்டன் அமரீந்தர் சிங் நேற்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரை சந்தித்தார். அதன் பிறகு கேப்டன் அமரீந்தர் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மகாராஷ்டிரா கவர்னராக அவர் நியமிக்கப்படலாம் என்ற செய்தி குறித்து அவரிடம் செய்தியார்கள் கேட்டனர். அதற்கு கேப்டன் அமரீந்தர் சிங் பதிலளிக்கையில் கூறியதாவது: என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. இது (மகாராஷ்டிரா கவர்னராக நியமிக்க வாய்ப்பு) முற்றிலும் ஊகம்.

எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது. யாரும் எதுவும் குறிப்பிடவில்லை. நான் உங்கள் வசம் இருக்கிறேன் நீங்கள் விரும்பும் இடத்தில் நான் இருக்க வேண்டும் என்று நான் பிரதமரிடம் முன்பே கூறியிருந்தேன். நீங்கள் எது சரி என்று நினைக்கிறீர்களோ, அதற்கு அவர் நான் இருப்பதாக பிரதமரிடம் முற்றிலும் தெளிப்படுத்தியுள்ளேன். பிரதமர் எந்த இடத்துக்கு நான் பிரதமர் செல்ல வேண்டும் என்று விரும்புகிறாரோ, அங்கு செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தற்போது மகாராஷ்டிரா கவர்னராக இருக்கும் பகத் சிங் கோஷ்யாரி அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியிடம் தனது பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் உத்ரகாண்ட் முதல்வரான பகத்சிங் கோஷ்யாரி தனது எஞ்சிய காலத்தை வாசிப்பு, எழுதுதல் மற்றும் பிற செயல்பாடுகளில் செலவிட விரும்புவதாக தெரிவித்தார். இதனையடுத்து மகாராஷ்டிராவின் அடுத்த கவர்னராக கேப்டன் அமரீந்தர் சிங்கை நியமனம் செய்ய பா.ஜ.க. தலைமை சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், விரைவில் அவர் மகாராஷ்டிரா கவர்னராக நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.