ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்ய ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.
குடிநீர் குழாய்கள் அமைப்பு ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்குந்தா ஊராட்சி, கிண்ணக்கொரை கிராமத்தில், உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்தல், அணைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கலெக்டர் அம்ரித் பேசும் போது, நீலகிரி மாவட்டத்தின் கடைகோடி கிராமமான 22 குக்கிராமங்கள் அடங்கிய இந்த கிண்ணக்கொரை கிராமத்தில் குடிநீர் வசதியினை நிறைவேற்றும் வகையில் சிறப்புப்பகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.5.45 கோடி மதிப்பில் சுமார் 19 கிலோ மீட்டர் தொலைவிற்கு குடிநீர் குழாய்கள் அமைத்து, அதன் மூலம் குடிநீர் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மே மாதத்திற்குள் இப்பணிகள் முடிக்கப்படும். மகளிர் திட்டம் சார்பில் சுயஉதவிக்குழுக்களுக்கு இந்த ஆண்டு ரூ.3.85 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் அடுத்த ஆண்டு இதைவிட அதிக அளவில் கடனுதவிகள் வழங்கவும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.57 லட்சத்தில் தேயிலை கிடங்கு, தடுப்புச்சுவர் கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளவும், கெத்தை- கோவை இடையே சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2023–&24 பட்ஜெட் கூட்டத்தொடரில் நீலகிரி மாவட்டத்திற்கு இயற்கை வேளாண்மையினை ஊக்குவிக்கும் விதமாக 5 வருடங்களுக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் திட்ட இயக்குநர் பாலகணேஷ், வருவாய் கோட்டாச்சியர் பூஷ்ணம், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தைவேல், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பாலுசாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், நிர்வாக பொறியாளர் ஜீவாசங்கர், ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தலைவர் மாயன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், விஜியா, மேல்குந்தா ஊராட்சி தலைவர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.