விழுப்புரம் அருகே 6 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற போது அவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருந்ததைகயும் இதை கவனித்த அவரின் ஆசிரியர் இது குறித்து விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் நல அலுவலரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். பின் அச்சிறுமியை முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

அப்போதுதான் அச்சிறுமி கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார் என்பது தெரியவந்தது. அச்சிறுமியிடம் குழந்தைகள் நல அலுவலர்கள் மேற்கொண்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 14 முதல் 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்தது தெரிய வந்தது. தன்னைப்போல், மேலும் 4 பெண் குழந்தைகளுக்கும் அவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீஸார் 4 சிறுவர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 6 வயதுடைய 5 பெண் குழந்தைகளுக்கும் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்ததும், அவர்களுக்கு ஆபாச படங்களை காண்பித்தும், ஆபாசமாக அவர்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் மாவட்ட இளஞ்சிறார் மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் கடந்த 29ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினர் இந்த வழக்கை வெளியில் தெரியாமல் மறைத்து வந்துள்ளார். அதிமுக அலுவலகத்தில் சிவி சண்முகம் எம்பி இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததை அடுத்தே, காவல்துறையினர் இது தொடர்பான பத்திரிகை செய்தியை முன்வந்து வெளியிட்டனர்.
வட மாநிலத்தைச் சேர்ந்தவரா? காவல்துறை மறுப்பு: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜானகிபுரம் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறிய சிறுமியின் தந்தை ஐஸ் விற்பனை செய்து வந்ததாகவும், வாடகை வீட்டில் இருந்த போது வீட்டு உரிமையாளரின் மகன், பெண் குழந்தைக்கு முதலில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், பின்னர் தனது நண்பர்களை கூட்டுக்கு சேர்த்து தொடர்ந்து இந்த பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது. அப்பெண் குழந்தையின் பூர்வீகம் தமிழ்நாடு தான், வடமாநிலம் இல்லை என்று காவல்துறையினர் உறுதியாக தெரிவித்திருந்தனர்.