சென்னை:
பெரம்பூரில் நகைக்கடையில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான நகை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் 4.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உருக்கப்பட்ட 3.5 கிலோ, உருக்கப்படாத 1 கிலோ நகை பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை பெரம்பூரில் கடந்த ஜனவரி 10ம் தேதி ஜெஎல் கோல்டு பேலஸ் நகைக்கடையில் சுமார் 6 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை ஓட்டை போட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு 10 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். தொடர்ந்து குற்றவாளிகள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கண்டறிய தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா என அனைத்து மாநிலங்களிலும் தீவிரமாக தேடி வந்தனர்.
பிப்ரவரி மாதம் சந்தேகப்படும் படியான இருவரை சிசிடிவி மூலம் காவல்துறையினர் கண்டறிந்தனர். பின்னர் அந்த காட்சிகளைக் கொண்டு பெங்களூருவில் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இருவரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே கொள்ளை வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் 5 நாட்கள் போலீஸ் காவல் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் மறைத்து வைத்திருப்பது எங்கே? என விசாரிக்கப்பட்டது. இந்நிலையில், பெரம்பூரில் நகைக்கடையில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான நகை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் 4.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு போலீசார் கைப்பற்றிய 2.4 கிலோ தங்க நகைகளை நீதிமன்றத்தில் உரிமை கோரி போலீசார் பெற்றனர்.