சட்டவிரோதப் போதைப்பொருள் வர்த்தகப் பிரச்சனைக்கு தீர்வுகாணவும், உள்ளூர் காவல்துறை மற்றும் போதைப்பொருள் தடுப்பு அமைப்புகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தியாவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய மற்றும் மாநில போதைப்பொருள் தடுப்பு சட்ட அமலாக்க முகமைகள் மற்றும் பிற நிறுவனங்கள் இடையே ஒருங்கிணைப்பை உறுதிசெய்ய 4-ம் நிலை போதைப்பொருள் ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், போதைப்பொருள் சட்ட அமலாக்கம் தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பறிமுதல் தொடர்பான விசாரணைக்கு கட்டுப்பாட்டு பணியகத்தின் தலைமை இயக்குநர் தலைமையில் ஒரு கூட்டு ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு பணிக்குழு ஒன்று கூடுதல் தலைமை இயக்குநர் / காவல்துறை தலைவர் அளவிலான அதிகாரி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள்-பயங்கரவாத வழக்குகளை விசாரிப்பதற்காக தேசிய புலனாய்வு நிறுவனத்திற்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது.
சர்வதேச எல்லையில் சட்டவிரோதப் போதைப்பொருள் கடத்தல்காரர்களைத் தேடுவதற்கும், போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்து, அவர்களை கைது செய்வதற்கும் எல்லைக் காவல் படையினருக்கும், ரயில்கள் வழியாக போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும் போதைப்பொருள் தடுப்பு சட்டம் 1985-ன் கீழ், அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல், கடல் வழியே போதைப்பொருள் கடத்தலை தடுக்க இந்திய கடலோர காவல்படைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு நித்யானந்த் ராய் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.