சென்னை:
மகா வீரர் ஜெயந்தி இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மகாவீரார் பீகார் மாநிலம் குண்ட கிராமா என்ற இடத்தில், ஒரு அரச சத்திரியய குடும்பத்தில் சித்தார்த்தா என்ற அரசருக்கும் திரிசாலா என்ற அரசிக்கும் மகனாகப் பிறந்தார். குண்டகிராமா என்ற இடம் தற்போது பீகார்ல் உள்ள வைசாலி என்ற இடத்திற்கு அருகில் உள்ளதாக நம்பப்படுகிறது. மகாவீரர் தனது 30 வயது வரை ஒரு இளவரசராக வாழ்ந்தார். அதற்குப் பிறகு ஆன்மீக அனுபவத்தைப் பெறுவதற்காக தனது அரண்மனை வாழ்க்கையைத் துறந்தார்.
ஒருவர் பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றின் சுழற்சியில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்றால் ஆன்மீகத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்று மகாவீரர் கற்பிக்கிறார். இல்லற வாழ்க்கையில் ஈடுபடுபவராக இருந்தாலும் அல்லது துறவற வாழ்க்கையில் ஈடுபடுபவராக இருந்தாலும் ஒருவர் ஆன்மீக அமைதியைப் பெற வேண்டும் என்றால் அகிம்சை (வன்முறை இல்லாமை), சத்யம் (உண்மை), அசத்தேயா (திருடாமை), பிரம்மச்சாரியா (பாலியல் உறவில் இருந்து விடுபட்டு இருத்தல்), அபாரிகிரகா (பற்றின்மை) போன்ற 5 விரதங்களை அல்லது 5 உறுதிமொழிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று சுவாமி மகாவீரர் கூறுகிறார்.
நல்லிணக்கம் மற்றும் அமைதியைக் கடைப்பிடிக்க மகாவீர் ஜெயந்தி மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், மகாவீரரின் போதனைகள் அவரது சீடர்களிடையே பிரசங்கங்களாக பரவுகின்றன.
மகாவீர் ஜெயந்தி என்பது உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு புனிதமான பண்டிகையாகும். குதிரைகள், யானைகள், தேர்கள், கோஷமிடுபவர்கள் உட்பட பெரிய ஊர்வலங்கள் நடத்தப்படும். மேலும் ஜெயின் துறவிகள் மகாவீரர் வகுத்த ஜைன மதக் கொள்கைகளைப் பற்றி பேசும் சொற்பொழிவுகளை வழங்குகிறார்கள்.
சைதாப்பேட்டையில்…
மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டையில் இன்று ஜெயின் சமுகத்தினர் மற்றும் ஆன்மீக அன்பர்கள் சார்பில் ஊர்வலம்நடைபெற்றது. ஊர்வலத்தில் மகாவீரர் படம் பொறுத்தப்பட்ட வாகனங்கள் அணிவகுத்து சென்றன. காலை 7.30 மணிக்கு ஜோன்ஸ் ரோடு ஜெயராஜ் திரையரங்கம் முன்பு தொடங்கியது. அங்கிருந்து காரணீஸ்வரர் கோவில், வி.எஸ். முதலி தெரு, சைதாப்பேட்டை பாலம் வழியாக பஜார் சாலையில் உள்ள ஜெயின் கோவிலை அடைந்தது. இந்த ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்றனர்.