மதுரை: மதுரையில் கனமழை பாதிப்பு மற்றும் மீட்பு நிவாரண பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தை பொருத்தவரை கடந்த ஆறு நாட்களாக இரவு நேரங்களில் அதிகப்படியான கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இதனால் மதுரை நகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியே கூட வர முடியாத நிலை உள்ளது. குறிப்பாக தல்லாகுளம், தமுக்கம் மைதானம், கோரிப்பாளையம், தபால் தந்தி நகர், பி பி குளம், கடச்சனேந்தல், முல்லை நகர் பனங்காடி, உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக மதுரை பிபி குளம், முல்லை நகர் பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் ஆலங்குளம் கண்மாயில் நீர் வரத்து அதிகமாகி உபரிநீர்கள் வெளியேறி மழை நீரோடு சேர்ந்து முல்லை நகர் குடியிருப்பு பகுதி முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளது.
குறிப்பாக முல்லை நகரில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் வீட்டிலிருந்து வெளியேறி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து முல்லை நகர் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிகாரிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் வெளியே செல்ல முடியாமலும் தங்க முடியாமலும் தவித்து வருவதாகவும், குற்றம் சாட்டினர். இதனையடுத்து அவர்களை சமாதானம் செய்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் மழைநீர் புகுந்த வீடுகளில் உள்ள பொதுமக்கள் அருகில் உள்ள பள்ளியில் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலங்குளம் கண்மாய் நிறைந்து வாய்க்கால் வழியாக மழைநீர் தொடர்ந்து வந்து குடியிருப்பு பகுதிக்குள் சூழ்ந்துள்ளது. எனவே ஆலங்குளம் கண்மாயில் இருந்து வரும் உபரி நீர் செல்வதற்கு வாய்க்கால்களை உடனடியாக சரி செய்ய வேண்டும், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழை நீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே முல்லை நகரில் தேங்கிய மழை நீரை பி.பி.குளம் கால்வாய், சின்ன சொக்கிகுளம் கால்வாய் வழியாக மதுரை உலக தமிழ்ச்சங்கம் எதிரே உள்ள கரும்பாலை பகுதியில் உள்ள கால்வாய் வழியாக வைகை ஆற்றிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், முல்லை நகர் பகுதியில் உள்ள தனபால் மேல்நிலைப் பள்ளியில் நிவாரண மையம் ஏற்படுத்தப்பட்டு சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குழந்தைகள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும் நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் சூடான உணவு வழங்கப்பட்டது. மாநகராட்சி பணியாற்றினார் குழு அமைக்கப்பட்டு வடிகாலில் மழைநீர் தங்கு தடையின்றி செல்வது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீர் வழித் தடத்தில் தடை ஏதும் ஏற்படும் பட்சத்தில் அதனை சீரமைத்திட 5 ஜேசிபி இயந்திரங்கள் களத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மதுரையில் கனமழை பாதிப்பு மற்றும் மீட்பு நிவாரண பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.