சென்னை:
தமிழக அரசுக்கு கிறிஸ்தவ மக்கள் பேரவை சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையில் கூறியிருப்பதாவது:
சாலைகள், பாலங்கள், சுரங்கப்பாதைகள்:
தமிழக மாநிலம் சென்னை மாவட்டத்தில் ஏராளமான சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. தரமற்ற தார் சாலைகளால் சாலை அமைக்கப்பட்ட சில காலங்களிலேயே அவை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் இதனால் விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே இதுபோன்ற சாலைகளை அதிகாரிகள் மூலமாக ஆய்வு மேற்கொண்டு சீர்படுத்தவும், தார் சாலைகளை தரமாக அமைக்கவும், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், குண்டும் குழியுமாக மோசமாக உள்ள சாலைகளை சீரமைக்கவும், ஒவ்வொரு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களின் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் ஏராளமான பேருந்து நிறுத்தங்களில் நிழல்குடை கிடையாது. அவ்வாறு நிழற்குடை இருந்தாலும் அவை சேதமடைந்து காணப்படுகிறது. எனவே இதனையும் அரசு கனிவுடன் பார்வையிட்டு நிழல்குடை அமைக்கவும், சேதமடைந்த நிழற்குடைகளை சீரமைக்கவும் கேட்டுக் கொள்கிறோம்.
மாணவர்கள் கட்டணத்தில் குளறுபடி:
தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், மக்களை வஞ்சிக்கும் வகையிலும் அனைத்து தனியார் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கட்டணம், தேர்வு கட்டணம் உள்ளிட்டவைகளுக்கு முறையாக பில் கொடுப்பது கிடையாது. உதாரணமாக 25 ஆயிரம் தொகை கட்டினால் அதற்கு 5 ஆயிரத்துக்கு மட்டுமே பணம் செலுத்தியதாக பில் கொடுக்கப்படுகிறது. மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது கிடையாது. அல்லது மிகவும் தாமதமாக வழங்கப்படுகிறது.
உயர் கல்வி படிக்க வங்கி கடன் வழங்கப்படுவது கிடையாது. எஸ்சி./ எஸ்டி மாணவ மாணவிகள் மற்றும் கிறிஸ்தவ, ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்க மறுக்கப்படுகிறது.
மாணவர்கள் நலனில் தமிழக முதல்வர் மிகுந்த அக்கரை கொண்டு திட்டங்களை செயல்படுத்திவரும் இந்த ஆட்சியில் அவரது பெயரை கெடுக்கும் வகையில் நடக்கும் இதுபோன்ற செயல்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.
கிராம நத்தம் நிலம் நீதிமன்ற தீர்ப்பு
ஏழை எளிய மக்களுக்கு நீதிமன்றம் வழங்கிய நியாய தீர்ப்பில் கிராம நத்தம் நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. நத்தம் நிலத்தில் நீண்ட காலமாக வீடு கட்டிக் குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
உதாரணமாக:
A.K.Thillaivanam Vs The District Collector, Chennai Anna District (2004.3.CTC -270)
The executive officer, Kadathur town panjayhath Vs V.S.Swaminathan (2012.2.CTC.315)
W.P.No.18754, 20304, 2613/2005 Dt.4.11.2013
கடந்த பல ஆண்டுகளாக, சென்னை உயர்நீதிமன்றம், டெல்லி உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் வழங்கிய இதுபோன்ற தீர்ப்புகள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனை தற்போதுள்ள தமிழக அரசு ஏழை, எளிய மக்களின் நலனுக்காக செயல்முறைப்படுத்த வேண்டும்.
மேற்கண்டவாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.