வரும் மக்களவை தேர்தலில் மோடியே மீண்டும் பிரதமர் வேட்பாளர் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் ஒன்றிய பாஜக அரசை வீழ்த்துவது தொடர்பாக 15 எதிர்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று பாட்னாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் ராகுல், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த புதிய வியூகம் வகுக்கப்பட்டது.

இதனிடையே உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒருநாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமித்ஷா எதிர்க்கட்சி கூட்டம் குறித்து விமர்சனம் செய்தார். அப்போது; பீகார் மாநிலம் பாட்னாவில் தற்போது போட்டோ எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிர்த்து நிற்க நினைக்கிறார்கள். வரும் 2024 மக்களவை தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் பிடித்து பெரிய வெற்றியை பெரும் பாஜக. 2024ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தான் மீண்டும் பிரதமராவார். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி பாதையில் நோக்கி செல்கிறது என்று கூறினார் அமித்ஷா.