திருச்சியில் வழக்கை சாதகமாக முடித்துத் தர ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் உதவி காவல் ஆய்வாளர் ரமாவை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் இன்று கைது செய்யபட்டார்.
கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்தவர் சரத். இவரது மனைவி அஜிதா. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே முறையாக உரிமம் பெற்று கேரள ஆயுர்வேத மசாஜ் செண்டரை நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டர் மீது விபச்சார தடுப்புப் பிரிவு போலீஸார் ஏப்ரல் மாதம் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் அஜிதா மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்த வழக்கை அஜிதாவுக்கு சாதகமாக முடித்து தருவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சமாக தருமாறு உதவி ஆய்வாளர் ரமா, அஜிதாவிடம் கேட்டுள்ளார். ஏற்கெனவே தொழில் பாதிக்கப்பட்டு நஷ்டமடைந்துள்ளதால், ரூ.10 ஆயிரம் தர இயலாது எனக் கூறிய அஜிதாவிடம், ரூ.3 ஆயிரம் அட்வான்சாகக் கொடுத்தால் மட்டுமே வழக்கை சாதகமாக முடித்துத் தர முடியும் என உதவி ஆய்வாளர் ரமா தெரிவித்துள்ளார். லஞ்சம் தர விரும்பாத அஜிதா, இது தொடர்பாக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு டிஎஸ்பி மணிகண்டனன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், சேவியர் ராணி, பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் போலீஸார் கொண்ட குழுவினர் திருச்சி விபச்சார தடுப்பு காவல் நிலையத்தில், இன்று காலை அஜிதாவிடமிருந்து ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது உதவி ஆய்வாளர் ரமாவை கைது செய்தனர்.
உதவி ஆய்வாளர் ரமா, கடந்த 4 ஆண்டுகளாக திருச்சி விபச்சாரத் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வருவதாகவும், திருச்சி மாநகரில் உள்ள 60 ஸ்பா சென்டர்களிலிருந்து மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை தனது வங்கிக் கணக்குக்கு கூகுள் பே மூலம் லஞ்சமாக பெற்று, அதை தனது உயர் அதிகாரிகளுக்கு பிரித்து கொடுத்ததும் ஊழல் தடுப்புப் போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், உதவி ஆய்வாளர் ரமா எந்தெந்த உயர் அதிகாரிகளுக்கு எவ்வளவு தொகை கொடுத்துள்ளார் என்பது குறித்த விவரங்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் விசாரணை வருகின்றனர்.