நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ.) அதானி குழும நிறுவனங்களுக்கு சுமார் ரூ.21,500 கோடி (260 கோடி டாலர்) கடன் வழங்கியுள்ளதாக இந்த தகவலை அறிந்த பெயர் வெளியிட விரும்பாத ஒரு நபர் தெரிவித்தார். அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை கடும் வீழ்ச்சி கண்டு வருவதையடுத்து நாட்டின் வங்கி கட்டுப்பாட்டாளரான இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளிடம் அவர்கள் அதானி குழும நிறுவனங்களுக்கு அளித்த கடன் குறித்த விவரங்களை அளிக்கும்படி கேட்டுள்ளதாக புளும்பெர்க் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் விமான போக்குவரத்து துறை கடந்த 2 நிதியாண்டுகளில் ரூ.24 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அளித்துள்ள பதில் அறிக்கையில், இந்திய விமான போக்குவரத்து துறைக்கு முந்தைய 2020-21ம் நிதியாண்டில் ரூ.12,479 கோடியும், கடந்த 2021-22ம் நிதியாண்டில் ரூ.11,658 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. விமான துறைக்கு ஆதரவளிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.விமான எரிபொருள் மீது அதிக வாட் வரி விதிக்கப்படுவது தொடர்பாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் பேசப்பட்டது. அதன் விளைவாக விமான எரிபொருள் மீதான வாட் வரி 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குறைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு உற்பத்தி நடவடிக்கைகளை அதிகரிக்கவும், இறக்குமதியை குறைக்கவும் இறக்குமதி செய்யப்படும் பொம்மைகள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் மீதான இறக்குமதி வரியை 70 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதேபோல், வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படும் சைக்கிள்களுக்கான இறக்குமதி வரியும் 30 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதா மத்திய பட்ஜெட் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் பொம்மைகள் மற்றும் சைக்கிள்கள் விலை அதிகரிக்கும்.

இந்தியாவில் மின்சார வாகனம் பயன்பாடு அதிகரித்து வருவதால், 2030ம் ஆண்டுக்குள் நாட்டில் மின்சார இரு சக்கர வாகன விற்பனை 2.2 கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முன்னணி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மின்சார இரு சக்கர வாகன சந்தையானது 2030ம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்த இருசக்கர வாகன சந்தையில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.