தனது அரசியல் சித்தாந்தம் எதைப்பற்றியது என்பதை உணர்த்தும் வகையில், தனது முதல் மாநாட்டில் விஜய் குறியீடு வைத்துள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாடு தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விஜயின் அரசியல் சித்தாந்தம் என்ன? அவர் எந்த அரசியலை முன்னெடுக்க போகிறார் என்பதை குறிக்கும் வகையில் மாநாடு திடலில், கட்டவுட்கள் வைக்கப்பட்டுள்ளது பெரிதும் கவனம் ஈர்த்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விஜய், பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வந்தாலும், தற்போது நடிப்பை விட்டுவிட்டு தீவிர அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு, அவரது ரசிகர்கள் மத்தியில் ஒரு வகையில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அவர் அரசியலுக்கு வருவது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், வரும் 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், அதற்கு முன்பாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்திருந்தார். புதிய கட்சி அறிவிப்பை வெளியிட்ட சில மாதங்களில், கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். சிகப்பு மஞ்சள் நிறம் கொண்ட இந்த கொடியில், நடுவில் பூ, இரு பக்கமும் யானை அமைப்புடன் இருக்கிறது.
முதல் மாநில மாநாடு – விக்கிரவாண்டி வி.சாலை
கோடி அறிமுக விழாவை தொடர்ந்து முதல் மாநாடு தொடர்பான அறிவிப்பும் வெளியானது. விஜய் தனது அரசியல் மாநாட்டை மதுரை அல்லது திருச்சியில் நடத்துவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக அவர் தனது முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடத்துவதாக அறிவித்தார். இதற்காக காவல்துறை அனுமதி கேட்டு கட்சியின் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.
இது குறித்து காவல்துறை கொடுத்த கேள்விகளுக்கு பதிலாளிக்க தாமதம் ஏற்பட்டதால், மாநாடு அறிவிக்கப்பட்ட தேதியில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக 2-வது முறையாக தீபாவளிக்கு முன்னதாக அக்டோபர் 27-ந் தேதி மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மாநாட்ல் வைக்கப்பட்டுள்ள கட்டவுட்கள் கவனம் ஈர்த்துள்ளது.
காமராஜர் – பெரியார் – விஜய் – அம்பேத்கர்
முதல் மாநாட்டுக்கு பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னதாக மேடைக்கு அருகில் கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ள இந்த கட்அவுட்டில், முதலில் கர்மவீரர் காமராஜர் படமும், அடுத்து சமூகநீதி போராளியான பெரியார் படமும், அடுத்ததாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் படமும் இருக்கும் நிலையில், அடுத்ததாக ஒடுகக்ப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராடிய அம்பேத்கர் படமும் இடம் பெற்றுள்ளது.
அந்த கட்அவுட்டில், காமராஜர், பெரியார் ஆகியோருக்கு அடுத்து விஜய், 4-வதாக அம்பேத்கர் புகைப்படம் இருக்கிறது என்று கூறியனாலும், இவர்களுக்கு நடுவில் தான் எனது அரசியல் என்று விஜய் குறியீடு மூலம் உணர்த்துகிறார் என்றும் கூறப்படுகிறது. ஊழல் இல்லாத ஆட்சிக்கு பெயர் பெற்றவர் கர்ம வீரர் காமராஜர். சமூக நீதிக்காக போராடியவர் பெரியார். அதேபோல் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக பாடுபட்டவர் அம்பேத்கர். இவர்கள் மூவரின் வழியில் தான் விஜய் தனது அரசியல் பயணத்தை முன்னேடுக்க போகிறார் என்று கூறப்படுகிறது.
இந்த சித்தாந்தத்தை உணர்த்தும் வகையில் தான், மாநாட்டுக்கான பிரம்மாண்ட மேடைக்கு அருகே இந்த பிரம்மாண்ட கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதன் அருகே, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியமானவர்கள், பெண் போராளிகள், மற்றும் சேர சோழ பாண்டிய மன்னர்களின் படங்களும் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்னதாக மாணவர்கள் மத்தியில் உரையாடியபோது, அம்பேத்கர், காமராஜர் மற்றும் பெரியாரை பற்றி படியுங்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.