விக்கிரவாண்டியில் விஜய் மாநாடு:
விஜய் மாநாட்டிற்கு அதிக அளவில் தொண்டர்கள் மற்றும் வாகனங்கள் திரள்வதால் மாற்று பாதையில் இயக்க காவல்துறை ஏற்பாடு
விக்கிரவாண்டி வி சாலையில் நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கு அதிக அளவில் வாகனங்கள் வருவதால் மாற்றுப் பாதையில் வாகனங்களை இயக்க காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
வி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்:
மாலை 4 மணிக்கு மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை 5 மணி முதல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விக்கிரவாண்டியை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். குறிப்பாக தற்போது விக்கிரவாண்டில் இருந்து விசாரணை செல்லும் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு கார்கள், வேன்கள் இருசக்கர வாகனங்கள் என தனியார் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்:
இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறை மாற்று ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் சென்னையில் இருந்து செல்லும் பேருந்துகள் கூட்டேரிப்பட்டு மயிலம் வழியாக விழுப்புரம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் செஞ்சி வழியாக திண்டிவனம் செல்லலாம்.
திருச்சியில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னை செல்பவர்கள் விழுப்புரத்தில் இருந்து செஞ்சி வழியாக சென்று அங்கிருந்து திண்டிவனம் சென்று சென்னை செல்லலாம் அதேபோல திருச்சியில் இருந்து விழுப்புரம் வரக்கூடிய வாகனங்கள் திண்டிவனத்தில் இருந்து கூட்டேரிப்பட்டு வழியாக மயிலம் சென்று அங்கிருந்து விழுப்புரம் போகலாம். மேலும் கூட்டேரிப்பட்டு சாலையை இலகுரக வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனரக வாகனங்களை பொறுத்தவரை திண்டிவனத்தில் இருந்து வில்லியனூர் புதுச்சேரி வழியாக சென்று விழுப்புரம் வருவதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்று ஏற்பாடு போக்குவரத்து நெரிசல் கட்டுப்படும் வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு திடலில் குடிக்க தண்ணீர் கிடைக்காததால் மயக்கமடையும் தொண்டர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க விரும்பும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி உள்ளதால் சிகிச்சை தாமதமாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.