மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறியதாக கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவில் 36 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்பட்டதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப் செல்போனில் இயங்கும் ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும். 2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகியோரால் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது. இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து கையகப்படுத்தினர். உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியை 2.20 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் ஆப் நிறுவனம் தங்களது பயனாளர்களை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் அவ்வபோது புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறியதாக கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவில் 36.77 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்பட்டதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் சுமார் 13 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி முடக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த நவம்பர் மாதம் 37 லட்சத்து 16 ஆயிரம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்பட்டது குறிப்பிடதக்கது.