பாரம்பரியமாக சித்த வைத்தியத்தின் மூலம் நோய்களுக்கு மருந்து கொடுத்து குணப்படுத்தும் குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார் சூப்பர் குட் சுப்பிரமணியம். மலை மேல் இருக்கும் ஊர் மக்களுடன் இவரது குடும்பமும் வாழ்ந்து வருகிறது. எதிர்பாராத விதமாக ஒரு மருந்தை இவர் கொடுக்க அதனால் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக கூறி அவரின் குடும்பத்திடம் இருந்து கிராம மக்கள் விலகி இருக்கின்றனர்.
இந்நிலையில், ஊரில் உள்ள ஒரு குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட, இதற்கு சித்த வைத்திய மருந்து கொடுக்க சுப்பிரமணியம் முயல்கிறார். ஆனால் முன்பு நடந்த விஷயத்தால் இவரிடம் சித்த வைத்திய மருந்தை வாங்காமல், மலை மேல் இருந்து கீழே உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். ஆனால் மலை மேல் இருந்து கீழே வருவதற்குள் அந்த குழந்தை இறந்து விடுகிறது. தான் சொல்லும் விஷயத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் உதாசினப்படுத்தியதால் மன வேதனையில் இருக்கிறார் சுப்பிரமணியம்.
இதனிடையே அந்த ஊர் மக்களுக்கு திடீரென ஒரு நோய் தாக்க அதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கின்றனர். இறுதியில் அந்த நோய்க்கு சுப்ரமணியம் மருந்து கொடுத்து கிராம மக்களை காப்பாற்றினாரா? அந்த மக்கள் சுப்பிரமணியத்தின் பேச்சை கேட்டார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
சித்த வைத்தியத்தின் முக்கியதுவம் குறித்து பார்வையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்துள்ளார் இயக்குனர் ஓம் விஜய். எதார்த்தமான திரைக்கதையை அமைத்திருந்தாலும் படத்தை ரசிக்கும் படி உள்ளது. சில இடங்களில் காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என்ற உணர்வு ஏற்படுகிறது.
காட்சிகளை அழகாக பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் மணிபெருமாள். இசையின் மூலம் படத்தை கூடுதலாக கவனிக்க வைத்துள்ளார் இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன். பின்னணி இசையின் மூலம் காட்சிகளை அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தியுள்ளார்.