விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், கூமாபட்டி கிராமத்தில் கடந்த 30.09.2024 அன்று பரையர் சமூகத்தைச் சார்ந்த இளைஞர் முத்துகுமார் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு சிலரால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தைக் கண்டித்து பட்டியல் இன மக்கள் சனநாயக ரீதியாக போராட்டம் நடத்தியதற்காக கூமாபட்டி காவல் நிலைய முதல் தகவல் அறிக்கை எண்.107, 108-ல் 133 நபர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வத்திராயிருப்பு காவல் நிலைய முதல் தகவல் அறிக்கை எண்.237-ல் பெயரிட்ட 119 நபர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் படுகொலை செய்யப்பட்ட முத்துகுமாரின் மாமனார், அவரின் மைத்துனர் ஆகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கூமாபட்டி கிராமத்தில் மூன்று வழக்குகளிலும் 60 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகர் சிம்மக்கல்லில் வசிக்கும் அய்யப்பன் த/பெ. உய்யப்பன் என்பவர் இந்தச் சம்பவங்களுக்கு சம்மந்தம் இல்லாத நபர் ஆவார்
இவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிவகாசியைச் சார்ந்த மைனர் அர்ச்சுன் த/பெ. மோகன் என்பவர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்ள்ளது. அதிலும், குறிப்பாக கடந்த 06 ஆண்டுகளுக்கு முன்பாக திருச்சியில் இறந்த கூமாபட்டியைச் சார்ந்த ராஜா த/பெ. ஜேம்ஸ் என்பவர் மீது இரண்டு வழக்குகளிலும் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காவல்துறை உரிய விசாரணை நடத்தாமல், திட்டமிட்டு கூமாபட்டி பட்டியல் இன மக்களின் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய் வழக்குகள் குறித்து நேற்று (12.11.2024) செவ்வாய்கிழமை காலை சென்னையில், ஒன்றிய அரசின் தேசிய பட்டியலின ஆணையத்தின் இயக்குநர் மரியாதைக்குரிய Dr.ரவிவர்மன் அவர்களை நேரடியாகச் சந்தித்து பொய் வழக்குகளை ரத்து செய்யக்கோரி மனு கொடுக்கப்பட்டது.
தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா தலைமையில், மாநில இளைஞரணிச் செயலாளர் பீமாராவ், சாத்தூர் ஒன்றியச் செயலாளர் அருண்பாண்டி ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.