சென்னை:
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடிமை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது மாணவர்கள் மத்தியில் அவர் பேசுகையில், மாநில சட்டமன்றம் ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் அது சரியாக இருந்தால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். இரண்டாவது, சரியான மசோதா இல்லை என்றால் அந்த மசோதாவை நிறுத்தி வைப்பது. நிறுத்தி வைப்பது என்றால் கிட்டத்தட்ட அந்த மசோதாவை நிராகரிப்பதாகத் தான் அர்த்தம். தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையானது நாட்டின் 40 சதவீத காப்பர் தேவையை பூர்த்தி செய்து வந்தது.
இந்தநிலையில் தான் நாட்டின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாடுகளில் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு மக்களை தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்ததாக தெரிவித்தார். இந்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கண்டனத்தில், ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு இப்படி பேசுகிறார். வெளியில் வந்து ஒரு பொதுக்கூட்டத்திலோ.. தூத்துக்குடியிலோ இதே போன்று பேச முடியுமா? நான் சவால் விடுக்கிறேன். 100 நாட்கள் நடந்த ஒரு போராட்டம், மிகப்பெரிய போராட்டம். 13 பேரை சுட்டுக்கொன்று இருக்கிறார்கள். இது அதிமுகவும் சொன்னதுதானே.. அப்போது முதல்வராக இருந்தவர் என்ன சொன்னார்.. தெரியாது..
டிவியில் பார்த்தேன் என்று சொன்னார். இதுக்கும் அதுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நான் இங்கு அரசியல் பேச விரும்பவில்லை. இதை கண்டிக்கிறேன். தைரியமாக தூத்துக்குடியில் போய் இதை பேச முடியுமா என்று நான் ஆளுநரிடம் கேட்கிறேன். நீங்கள் ராஜ்பவனில் உட்கார்ந்து கொண்டு இதையெல்லாம் பேசுகிறீர்கள். இது வன்மையாக கண்டித்தக்கது. தூத்துக்குடியில் போய் ஆளுநரை இதை பேச சொல்லுங்கள். அப்போது மக்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்று தெரியும்“ என்றார்.
செல்வப்பெருந்தகை
இது தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது அரசமைப்புச்சட்ட நடைமுறைப்படி, அமைச்சரவை அல்லது சட்டப்பேரவையின் முடிவுக்கு மேலான அதிகாரம் உள்ளவராக ஓர் ஆளுநர் செயல்பட முடியாது என்பது என்பது மிகவும் சாத்தியமான உண்மை. ஆளுநர் பொறுப்புக்குச் சிறிதும் பொருத்தமற்ற வகையில் அதிகாரத்தை பொது வெளியில் பேசுவதை ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆளுநர் என்பவர் ஆளநராக செயல்பட வேண்டும் ஓர் சர்வாதிகாரி போல் செயலாற்றவது தமிழ்நாட்டில் இன்று அல்ல எப்பொழுதும் அவர் கருத்துக்களை திணிக்க முடியாது. இன்று ஆளுநர் அவர்கள் தெரிவித்துள்ள கருத்து அவர் வகிக்கும் பதவிக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் அவர் செய்யும் துரோகம், குறிப்பாக ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான ஆளுநரின் கருத்து என்பது அமைதி பூங்காவாக உள்ள தமிழ்நாட்டை சீர்குலைக்கும் வகையில் ஆளுநர் பேசியிருக்கும் கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டார்.
ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா விடுத்துள்ள பதிவு வருமாறு;
‘’தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வெளிநாட்டு அமைப்பினர் ஏராளமாகப் பணத்தைக் கொடுத்து உள்ளூர் மக்களைப் போராட்டத்திற்குத் தூண்டி அதன் மூலம் அந்த ஆலை மூடப்பட்டதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளது கண்டனத்திற்குரியது. எந்தவித ஆதாரமும் இல்லாமல் மாநிலத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆளுநர் அவர்கள் இதுபோன்ற கருத்தைத் தெரிவித்திருப்பது ஆணவத்தின் வெளிப்பாடாகும்.
நாசகர ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தன்னெழுச்சியாக போராடிய மக்கள் மற்றும் அதற்கு எதிராக தன்னுடைய உயிரைத் தியாகம் செய்தவர்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக ஆளுநர் ரவி கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து தமிழக மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.’’ இவ்வாறு ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
கே.பி.முனுசாமி
வெளிநாட்டு நிதியால் போராட்டத்தை தாண்டி ஸ்டெர்லைட் மூடப்பட்டதாக ஆளுநர் கூறியதற்கு அதிமுக துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பதில் அளித்துள்ளார். மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் தான் கடந்தகால அரசுகள் ஸ்டெர்லைட் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிரதமர் மோடி கடுமையான உழைப்பால் நாட்டு மக்களை காக்க உலக தலைவராக உயர்ந்துள்ளார். அப்படி இருக்கும் போது அந்நிய நாட்டு பணம் இந்தியா வருவதற்கு அனுமதிக்க மாட்டார். சட்டவிரோதமாக பணம் வந்தாலும் உரிய நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்திருப்பார் பிரதமர் மோடி என்றார்.