ஐபிஎல் 17ஆவது சீசனுக்கு முன், மகேந்திரசிங் தோனிக்கு, கால் முட்டியில் காயம் இருந்ததால், அவர் விளையாடுவாரா, மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், 17ஆவது சீசனில் தோனி விளையாடினார்.
கால் முட்டி காயம் காரணதாக, தோனி ரெகுலரான இடத்தில் களமிறங்கவில்லை. 7ஆவது இடத்திற்கு பிறகுதான், தோனி களமிறங்கி வந்தார். 14 போட்டிகளில் களமிறங்கிய அவர், 161 ரன்களை பறக்கவிட்டார். ஒரு போட்டியில் 37 ரன்களை குவித்தும் அசத்தினார். கடைசி சில பந்துகளை மட்டுமே எதிர்கொள்ள வாய்ப்பு இருந்தும், அதில் 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை குவித்து பிரமிக்க வைத்தார்.
இந்நிலையில், 18ஆவது சீசனிலும் தோனி பங்கேற்று விளையாட வேண்டும் என ரசிகர்கள், தொடர் கோரிக்கைகளை வைத்து வந்தார்கள். ஆனால், 18ஆவது சீசனில் விளையாடுவது குறித்து, பின்னர் அறிவிக்கிறேன் என தோனி கூறியிருந்தார். இதனால், தோனி 18ஆவது சீசனில் பங்கேற்க வாய்ப்பு குறைவு எனக் கருதப்பட்டது. சமீப நாட்களுக்கு முன், இதுகுறித்து சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதனிடம் கேட்டபோது, ‘’அக்டோபர் 31ஆம் தேதிக்குள், 18ஆவது சீசனில் விளையாடாலாம, இல்லையா என்பதை அறிவிப்பேன் என தோனி என்னிடம் கூறினார்’’ என்றார்.
இந்நிலையில், 18ஆவது சீசனில் தோனி நிச்சயம் பங்கேற்பார் என காசி விஸ்வநாதன் அறிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், ‘‘தோனி தயாராக இருக்கிறார். இதற்குமேல் எங்களுக்கு என்ன வேண்டும்?’’ என மகிழ்ச்சியில் கூறிவிட்டு சென்றார்.
மகேந்திரசிங் தோனியை, அன்கேப்ட் வீரர் இடத்தில் தக்கவைக்க உள்ளனர். மேலும், சிஎஸ்கேவில் முதல் வீரராக ரவீந்திர ஜடேஜாவை 18 கோடிக்கு தக்கவைக்க உள்ளனர். இரண்டாவது வீரராக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டையும் 18 கோடிக்கு தக்கவைக்க உள்ளனர். மதிச பதிரனாவை 14 கோடிக்கும் தக்கவைக்க உள்ளார்கள். மற்ற யாரையும் தக்கவைக்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஷிவம் துபே போன்றவர்களை ஆர்டிஎம் கார்ட்களை பயன்படுத்தி தக்கவைக்க உள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது. சிஎஸ்கே 4 வீரர்களை மட்டும் தக்கவைத்தால், அந்த அணிக்கு 2 ஆர்டிஎம் கார்ட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.