வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி மணிப்பூரில் நடைபெறும் கலவரங்களை தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டியும், அரசியல் சட்டம் 355வது பிரிவின் கீழ் மணிப்பூர் மாநில அரசை கலைத்திடக் கோரியும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது :
கடந்த மே மாதம் 3ஆம்தேதியிலிருந்து, வடகிழக்கு மாகாணமான மணிப்பூரில், சமவெளிப்பகுதியில் வாழும் மெய்தி என்னும் மெஜாரிட்டி இன மக்களுக்கும் மலைப் பகுதிகளில் மைனாரிட்டி எண்ணிக்கையில் வாழும் குக்கி இன பழங்குடி மக்களுக்கும், மிகவும் பயங்கரமான அளவில் கலவரம் நடந்து வருகின்றது. இந்த கலவரத்துக்குக் காரணம், மெய்தி இன மக்களின் நீண்டகால கோரிக்கையான அவர்களது இனத்தை, இந்திய அரசியல் சட்டத்தின்கீழ் எஸ்.டி பிரிவாக பழங்குடி மக்களின் பிரிவாக அறிவிக்க வேண்டும் என்பதை ஒட்டியதாகும்.
கடந்த ஏப்ரல் மாதம், மணிப்பூர் உயர் நீதிமன்றம் அதன் நிலுவையில் இருந்த வழக்கில் தீர்ப்பளிக்கும்போது, அம் மக்களின் கோரிக்கையின் மீது தக்க நடவடிக்கையை ஒரு மாதத்திற்குள் எடுக்கும்படி ஆணையிட்டுருந்தது. மணிப்பூரில் வாழும் பழங்குடி இன மக்கள், இக்கோரிக்கையைக் கடுமையாக எதிர்த்தனர் மணிப்பூர் அனைத்து பழங்குடி இன மாணவர்கள் அமைப்பு, இக்கோரிக்கையை எதிர்த்து, மே மாதம் 3ஆம் நாள் ஒரு மாபெரும் ஊர்வலத்தை நடத்தியது. இந்த ஊர்வலம் முடிகின்ற தருணத்தில் மெய்தி இன மக்களுக்கும், குக்கி இன மக்களுக்கும் இடையே கலவரம் உருவாகி, வன்முறை வெடித்தது. இதுவரை சுமார் 100 பேர் கொல்லப்பட்டதாகவும், 300க்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்ததையும் ஆயிரக் கணக்கானவர்கள் வீடுகளை இழந்ததையும் எண்ணிலடங்கா சர்ச்சுகளும், கோயில்களும் இடிக்கப்பட்டதையும் அறிந்தும் இதற்குக் காரணமான மாநில அரசு, எந்த தீர்வும் காணாமல் ஒதுங்கி நிற்கின்றது. இன்னமும் இந்த கொடுமைகள் வளர்ந்து மிசோரம் மாநிலத்திலும் பரவத் தொடங்கியுள்ளது, கடந்த சில நாட்களாக, மணிப்பூர் மாநில தலைவர்கள், பிரதமரைச் சந்தித்து, உடனடியாக அவர் இதில் தலையிட வேண்டும் என்று பிரதமரைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தரும்படி கோரியுள்ளோம், அமைதி உண்டாக்கும் வகையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் நாட்களைக் கடத்தி வருவதால், ஒரு வேளை அரசுக்கே தீர்வு காண விருப்பம் இல்லையோ, இந்த கலவரம் தொடர்ந்து நடந்திட வேண்டும் என ஒன்றிய அரசு விரும்புகின்றதோ, என்று அச்சம் ஏற்படுகிறது.
சுமார் 10,000-க்கும் மேற்பட்ட இந்திய இராணுவத் துருப்புகளும், மற்றும் துணை இராணுவ அமைப்புகளைச் சார்ந்தவர்களும் மணிப்பூரில் உடனடியாக குவிக்கப்பட்டுள்ளனர். இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மாநிலமெங்கும் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. மோசமான நிலை இருக்குமானால், தடையை மீறும் மக்களைக் கண்டதும் சுடுவதற்கு, இராணுவத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் 14ஆம் தேதி நடந்த வன்முறையில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், 14 பேர் காயமுற்றதாகவும் தெரிகிறது, மணிப்பூர் தலைநகரில் உள்ள மருத்துவர்களும், உயர் அதிகாரிகளும், இறுதியாக நடந்த கலவரம் மிகக் கொடூரமாக இருந்ததாகவும், கொல்லப்பட்டவர்கள் அடையாளம் காணப்படாத வகையில் அவர்களது உடல்கள் சிதைக்கப் பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
அங்கே ஆட்சி செய்வதோ பி.ஜே.பி. தலைமையிலான இரட்டை என்ஜின் மத்தியிலும் மாநிலத்திலேயும் பி.ஜே.பி. ஆட்சிதான் நடந்து வருகிறது கடந்த ஆண்டு, மார்ச் மாதத்தில் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நோங்தோம்பம் பிரேன் சிங் ஆட்சிதான் நடைபெறுகின்றது. ஆனாலும் மணிப்பூர் மக்கள் அவர்கள் எந்த மதமாக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும், அவர்கள் எல்லோருமே இப்போது துயரத்தில் உள்ளனர்.
பி.ஜே.பி-யின் டபுள் என்ஜின் அரசாங்கங்கள் முழுவதுமாகவே தடம் புரண்டு விட்டன அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் எல்லா இன, சாதி மக்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் பிரதமர் தனது மௌனத்தைத் தொடர்கின்றார். அடுத்து நவம்பர் 2023-ல் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் தனது அடுத்த கட்ட பிரச்சாரத்தை நடத்திக் கொண்டுள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சகமும் அங்கே ஒரு குழுவை அனுப்பி நிலைமையை கண்காணிக்கத் தேவையான நடவடிக்கைகளை இன்னமும் எடுக்கவில்லை.
இந்த கலவரத்தில் தங்கள் பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்மார்களை, சகோதரர்களை இழந்த இளம் சகோதரிகளைக் காணும் போது நெஞ்சம் பதறுகிறது.
உள்துறை அமைச்சர், தங்கள் கவனத்தை அரசியல் சட்டத்தின் 355வது பிரிவின் மீது ஈர்க்கின்றேன். அரசியல் சட்டத்தின் 355வது பிரிவு, நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களையும் வெளிநாட்டு படையெடுப்பில் இருந்து பாதுகாப்பதும், ஒவ்வொரு மாநிலத்தையும் உள்நாட்டுக் குழப்பங்கள் ஏதும் இன்றி பாதுகாப்பதும் ஒன்றிய அரசின் கடமை. அனைத்து மாநிலங்களிலும், அரசியல் சட்டத்தின்படி ஆட்சி நடைபெறுகின்றதா என்பதைக் கண்காணிப்பதும் ஒன்றிய அரசின் கடமை என்று கூறுகிறது. ஆனால் மணிப்பூரில் தற்போது நடப்பது என்ன என்பதைப் பாருங்கள் 355வது பிரிவின்படி அந்த மாநில ஆட்சி கலைக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சியின் கீழ் கொண்டுவரப்படுவது அவசியம் இல்லையா? மணிப்பூரின் முக்கிய அதிகாரிகள் ஒன்றிய அரசு அவசரகால சட்டப்படி அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளது என்றும் ஆனால் இது குறித்து அறிவிப்பு ஆணை எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் கூறுகின்றனர். இது உண்மை எனில், ஒன்றிய அரசு, தனது கடமையில் இருந்து தவறிய மாநில அரசை இன்னுமும் ஏன் நீக்கவில்லை?
மேற்கூறிய காரணங்களை அமைச்சர் அமித்ஷா ஆய்ந்து, அரசியல் சட்டத்தின் 355வது பிரிவின் கீழ் மணிப்பூர் மாநில மக்களின் உயிரையும், உடமைகளையும் காக்க தவறிய மாநில அரசை டிஸ்மிஸ் செய்து, ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டுவருவதற்கு ஏற்ப ஆணைகள் வெளியிடும்படி தங்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.