ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட கைப் பக்குவமும் இருக்கும். ஒரு சிலர் சமைக்கும் உணவு மிகவும் சுவையுள்ளதாகவும், ஒருசிலர் கைப்பக்குவத்தில் அவர்கள் சமைப்பது சுவை சற்று குறைவாகவும் இருக்கும். அவ்வாறு அசைவ உணவு என்றாலே கோழிக்கறி, ஆட்டுக்கறி அல்லது மீன் வகைகள் தான். இவற்றில் பலரும் விரும்பி சாப்பிடுவது கோழிக்கறியை தான். ஆனால் ஒரு சிலர் கோழிக் கறியைத் தவிர்த்து ஆட்டுக்கறியை மட்டுமே வாங்கி சமைத்து உண்பார்கள். அவர்களுக்கு வித்தியாசமான முறையில் இவ்வாறு அவரைக்காய் சேர்த்து மட்டன் கீமா தயார் கொடுத்து பாருங்கள். மிகவும் ஆஹா என்ன ருசி என்பார்கள். ஒரு முறை சுவைத்து விட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிடுவீர்கள். வாருங்கள் இதனை எப்படி சமைக்கலாம் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
மட்டன் கீமா – அரை கிலோ, நாட்டு அவரைக்காய் – 150 கிராம், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 3, மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – 1, பூண்டு – 6 பல், மிளகாய்தூள் – ஒன்றரை ஸ்பூன், சோம்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 8 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.
செய்முறை: முதலில் மட்டன் கீமாவை சுத்தம் செய்து அதனுடன் அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து புட்டு மாவு அவிப்பது போல் இட்லி பாத்திரத்தில் வைத்து அவித்துக் கொள்ள வேண்டும். பிறகு இஞ்சி மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் அவரைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, 8 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பிறகு தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, அதன் பின் நறுக்கி வைத்துள்ள அவரைக்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் வேக வைத்த மட்டன் கீமாவையும் சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவைக்கவேண்டும்.
அவ்வளவுதான் ஒரு பத்து நிமிடத்தில் சுவையான அவரைக்காய் மட்டன் தயாராகிவிடும். பின்னர் இறுதியாக கொத்தமல்லி தழைகளைத் தூவி அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். இதனை சுட சுட சாதத்துடன் சாப்பிட்டு பாருங்கள் எப்படி இருக்கும் தெரியுமா.