இன்று தன் அண்ணனின் இரண்டாவது குழந்தையின் காதுகுத்து விழா. காலையிலேயே மல்லி(கா) தன் தாய் வீட்டில் குடும்பத்தோடு வேலைகளை துரிதமாக செய்துகொண்டிருந்தாள்.
“மகா செல்லம்… சீக்கிரம் குளித்து விட்டு வா…நேரமாயிடிச்சு…அத்தை உன்ன அலங்கரிச்சு விடுறேன்” என்று தன் பத்து வயதான மருமகளிடம் (அண்ணனின் மூத்த மகள்) சொல்லிவிட்டு தானும் தயாரானாள்.
மல்லி தன்னுடன் வந்திருந்த மாமியாருக்கும் சாப்பாடு கொடுத்து விட்டு காலை நேர மாத்திரைகளையும் சாப்பிட வைத்தாள்.
“நாத்தனாரே…எல்லாரும் தயாரா…!? இந்த பூவை மகாவிற்கு வைத்துவிடுங்க ” என்று கொஞ்சம் மல்லிப்பூவை மல்லிகாவிடம் கொடுத்துவிட்டு தானும் தலையில் பூவை வைத்துக்கொண்டே நகர்ந்தாள் அண்ணனின் மனைவி மீனா.
எல்லோரும் தயாராகி கோயிலுக்கு போவதற்கு வீட்டை பூட்டு விட்டு கிளம்ப ஆயத்தமானார்கள்.
திடீரென்று “அத்தை…அத்தை…” என்ற மகாவின் குரல் குடும்பத்தில் உள்ள அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. “அத்தை..நீங்க ஒன்றை மறந்துட்டீங்களே!” மல்லி சற்றே குழம்பினாள்.
மகா தொடர்ந்தாள்… “அத்தை…இங்க பாருங்க…அம்மா, பாட்டி, சித்தி என எல்லாருமே தலையில பூ வச்சிட்டாங்க…ஆனா நீங்க பூ வைக்க மறந்துட்டீங்களே..இந்தாங்க அத்தை வைங்க!” என்று கையில் பூவை நீட்டிய மகாவை பார்த்து குடும்பத்தில் அனைவரும் திகைத்து போனார்கள்.
ஆம். மல்லி தன் கணவனை இழந்தவள். மறுமணம் செய்து கொள்ளாமலே வேலைக்குச் சென்று தன் ஒரு மகனையும் வயதான மாமனார் மாமியாரையும் தன் கணவன் இடத்தில் நின்று ஆணிவேராக குடும்பத்தை காத்து வருபவள்.
அப்படியே ஒருநிமிடம் நின்ற மல்லியின் கண்களில் நீர் நிறைந்தது. அதை மறைத்து மகாவை கட்டி அணைத்துக் கொண்டு சொன்னாள் “எனக்கு பூ வேண்டாம் டா தங்கமே…”
“அவ சிறுபிள்ளை…தெரியாத்தனமா சொல்லிட்டா… மன்னித்து விடுங்க அண்ணி…” என்று கூறிக்கொண்டு தன் மகள் மகாவை சற்றே அதட்ட வந்தாள் மீனா.
இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மீனாவின் அக்காள் மகள் வேதஷ்யா (கல்லூரி படித்துக் கொண்டிருப்பவள்) குறுக்கிட்டாள். “மகா சொன்னதிலே என்ன தப்பு இருக்கு சித்தி..அவள ஏன் அதட்டிறீங்க? நாம எல்லாரும் பூ வைக்கிறோம். அவங்க ஏன் வைக்க கூடாது? புருஷன் இல்லனா…பூ வைக்க கூடாதுனு சட்டம் எதாச்சும் இருக்கா என்ன? பூ, பொட்டு, புது துணி னு, நம்மள முதன் முதலா எல்லாம் போட்டு அழகு பாத்தவங்க யாரு? நம்மள பெத்த அம்மா அப்பா தானே!? பொண்ணுங்கள கல்யாணம் பண்ணி கொடுத்து நடுவிலே கணவன் னு ஒருத்தன் இல்லாம போயிட்டா நாம பொண்ணே இல்ல னு ஆயிடுமா? நமக்கும் பொண்ணுங்குற மனசு இல்லாம போயிடுமா? பிற ஆண்கள் நம்மள பாக்காம இருக்க தான் நம்ம சமூகத்துல இப்படி ஒண்ண திணிச்சாங்கனா , அது அந்த பெண்ணையும் அவள் ஒழுக்கத்தையும் இழிவு படுத்துற நினப்பு. மறுமணமும் இப்போ நடைமுறையில் ஏற்கத்தக்கதா மாறிகிட்டு தான் வருது. ஒரு கணவனை இழந்த பெண் தன் பெண்மைக்கே உரிய இந்த சின்ன சின்ன விருப்பத்தை ஏன் தியாகம் பண்ணணும்? அதை ஏன் அவளை சுத்தி இருக்கும் சமூகமும் அவள் இப்படி தான் இருக்கணும்னு எதிர் பார்க்கணும்? சுற்றி இருப்பவர்கள் புண்படுத்தும்படி சொல்வார்களோ என்று பயந்தே பல பெண்கள் தன் விருப்பங்களை மறைத்து வாழ வேண்டிய அவலம் இப்போவும் இருந்துகிட்டே தான் இருக்கு இந்த மாதிரி. கணவன் தன் கையால் ஆசையாக அவளுக்கு கட்டிய தாலி கூட அவள் விருப்பப்பட்டால் அணிஞ்சுக்கறுதுல என்ன தப்பு?. தாலி ஒரு வேலி னு சொல்றாங்க. என்ன பொறுத்தவரே அந்த வேலி தடை இல்லே. இப்போ இருக்குற சமூகத்துல அது கூட சில சமயங்களில் பாதுகாப்பு தான். சமூகத்தில் இந்த மாற்றங்கள் எல்லாம் ஏற்கபட வேண்டியதாக மாறணும்.”
இந்த வாக்குவாதத்தை எல்லாம் கேட்டுகிட்டிருந்த மல்லியின் மாமியார் மரகதம் மல்லியின் அருகில் வந்தார். மகாவின் கைகளில் இருந்த பூவை வாங்கினாள். “மல்லி… வேதா (வேதஷ்யா) சொல்றதிலே கூட நியாயம் இருக்கு. நீ என்னோட வயித்துல பொறக்கல. ஆனா உன்னோட வாழ்க்கைய எங்களுக்காக நீ வாழ்ந்துகிட்டு வற. நீ என்னோட மருமக இல்லே. மகள்! என்னோட மகளா, இந்த பூவை வச்சுக்க எந்த விதத்திலையும் நீ குறைஞ்சவ இல்ல மா…”என்று கண்கள் பெருக்கெடுக்க மல்லியின் தலையில் பூவை வைத்துவிட்டாள் மரகதம்.
இதை பார்த்து சுற்றி நின்றிருந்த குடும்பத்தில் அனைவரின் நெஞ்சமும் கனக்க… மரகதத்தை “அம்மா…” என்று கண்ணீருடன் கட்டி அணைத்துக் கொண்டாள் மல்லி.
– ஜெ.ர. ஜெனிதா
கன்னியாகுமரி
Leave a Reply