70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் அக்டோபர் 8ஆம் தேதி நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 7வது முறையாக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றுக் கொண்டார்.
தலைநகர் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் 70வது தேசிய திரைப்பட விருதுகள் விழா நடைபெற்றது. 2022ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களில் சிறந்த கலைநயத்தை வெளிப்படுத்திய கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருதுகளை வழங்கினார். இந்திய திரையுலகின் வளர்ச்சிக்கு பங்களித்த மூத்த நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பொன்னியன் செல்வன் 1 படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றார். படத்தின் பின்னணி இசைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் தேசிய விருதை வெல்வது 7வது முறையாகும்.
காந்தாரா
மிகவும் பிரபலமான படத்திற்கான தேசிய விருது காந்தாராவுக்கு கிடைத்தது. மேலும் சிறந்த நடிகருக்கான விருதை ரிஷப் ஷெட்டி பெற்றுக் கொண்டார்.
சிறந்த தமிழ் படம்
2022ம் ஆண்டின் சிறந்த தமிழ் படமாக பொன்னியின் செல்வன் பாகம் 1 படம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருதை திரெளபதி முர்மு வழங்க இயக்குநர் மணிரத்னமும், தயாரிப்பாளரும் பெற்றுக் கொண்டனர்.
சிறந்த கன்னட படம் – கேஜிஎஃப் 2
2022ல் வசூல் மழை பொழிந்த கேஜிஎஃப் 2 சிறந்த கன்னட திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. சிறந்த சண்டை காட்சிகளுக்கான விருதும் இப்படத்திற்கு வழங்கப்பட்டது. அன்பு-அறிவு இந்த விருதைப் பெற்றனர். பாலியல் வழக்கில் ஜானி மாஸ்டர் சிக்கியதால் அவருக்கு தேசிய விருது வழங்கப்படவில்லை.
சிறந்த நடனம் – திருச்சிற்றம்பலம்
மேகம் கருக்காதா பெண்ணே பாடலுக்காக சதீஷ் கிருஷ்ணன் சிறந்த நடனத்திற்கான தேசிய விருதை திரெளபதி முர்முவிடம் இருந்து பெற்றார். சிறந்த நடிகைக்கான விருது நித்யா மேனனுக்கு வழங்கப்பட்டது. விருதை பெற்ற பிறகு பேசிய அவர் தனுஷுடன் மீண்டும் ஒரு படத்தில் பணியாற்றுவதாக தெரிவித்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான்
அதிக முறை சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றவராக ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளார். முதன் முறையாக 1992ல் வெளிவந்த ரோஜா படத்திற்காக தேசிய விருதை வென்றார். அதன் பிறகு 1996ல் மின்சார கனவு, 2001ல் அமீர்கான் நடித்த லகான், 2001ல் கன்னத்தில் முத்தமிட்டால், 2017ல் காற்று வெளியிடை, அதே ஆண்டு ஸ்ரீதேவியின் மாம் திரைப்படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை வென்றார். ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் அறிவிக்கப்பட்டதும் கரகோஷம் எழுந்தது. அவர் மேடையில் திரெளபதி முர்முவிடம் சிரித்தபடி விருதினை பெற்றுக் கொண்டார்.
சிறந்த தெலுங்கு படம்
கார்த்திகேயா 2 திரைப்படம் சிறந்த தெலுங்கு படத்திற்கான தேசிய விருதை வென்றது. சிறந்த இயக்குநருக்கான விருதை சூரஜ் பர்ஜத்யா பெற்றுக் கொண்டார்.