‘இறப்பு’ என்பது எல்லோரும் விரும்பாத ஒன்று. மரணத்தை பொதுவாக யாரும் விரும்புவதில்லை; கொண்டாடுவதும் இல்லை.ஆனால்…..உலகிலேயே இறப்பைக் கொண்டாடும் நகரம் காசி மட்டுமே.ஆலயங்களில் கூட்டம்; மருத்துவமனைகளில் கூட்டம்; ஜோதிடர்களிடம் கூட்டம். இப்படி எல்லா கூட்டங்களிலும் உள்ள மக்களின் நோக்கம், மரணத்தை தள்ளி வைத்துவிட்டு நிம்மதியாக நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது.ஆனால் நிம்மதியாக மரணம் அடைய வேண்டும் என்பதற்காக மக்கள் ஒரே ஒரு இடத்தில் கூடுகிறார்கள். அந்த இடம்தான் காசி நகரம்.இங்கு மக்கள் இறப்பைக் கொண்டாடுகிறார்கள். துளி அளவும் இறப்பின் சோகம் யாரையும் வாட்டுவதில்லை.இங்கே உள்ள கோவில்களில் இசையும் மந்திரமும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. மனிதர்களின் இறுதி மூச்சும் அதோடு கலந்து காற்றோடு, மண்ணோடு, நீரோடு சங்கமித்துக் கொண்டிருக்கிறது.‘இறப்பு யார் கையிலும் இல்லை. இறப்பு அவ்வளவு எளிதான காரியம் ஒன்றும் இல்லை’ என்பதையும் காசி நிரூபித்துக் கொண்டிருக்கிறது.உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக இலட்சங்களை மருத்துவமனையில் செலவிடுபவர்கள் திடீரென இறந்து விடுகிறார்கள்.ஆனால் காசியில் இறப்புக்காகக் காத்திருப்பவர்கள், அதைத் தேடி வருடக்கணக்கில் காத்திருக்கிறார்கள். அதுதான் கிடைத்தபாடில்லை.காசி, பூமி தோன்றியபோதே உருவானதாக கருதப்படும் புண்ணிய நகரம்.உத்திரப்பிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டம், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளது. 1800 கோவில்களுடன் அது, இந்தியாவிலேயே அதிகமாக கோவில்களைக் கொண்ட நகரம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது.எந்நேரமும் பக்தர்கள் கோவில்களை நோக்கி நடந்து சென்று கொண்டே இருப்பதால் இரவுக்கும் பகலுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. எந்நேரமும் வெளிச்சம்.காசி’ என்றால் ‘ஒளி தரும்’ என்பது புராண அர்த்தம்.இந்து மதத்தைத் தழைக்க வைத்த ஞானிகள் பலரின் மூச்சு, காற்றோடு கலந்து, அவர்கள் ஒவ்வொருவரின் பாதப் பதிவுகளும் அங்கே மண்ணோடு விரவிக் கிடக்கிறது.இந்த ஞானபூமியின் ஒவ்வொரு தெருவிற்கும் ஒரு கதை! அங்கிருக்கும் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு புராணம்.காசியைத் தொட்டு ஓடும் புண்ணிய நதி கங்கை! வருணை நதியும், அஸி நதியும் இதன் எல்லைகள். அஸி கங்கையில் சங்கமம் ஆகும் இடம் அஸி கட்டம்.
காசியின் நீளம் கங்கைக்கரை ஓரமாக நான்கு மைல்!காசியில் புகழ் பெற்றிருப்பது விஸ்வநாதர் ஆலயம். இந்த கோவில் ஒரு குறுகிய தெருவில் அமைந்திருக்கிறது.உள் பிரகாரம் வளவளப்பான சலவைக் கல்லில் ஜொலிக்கிறது.மையத்தில் கருவறை. கங்கை நீர், பால், வில்வ இலைகளால் அபிசேகம் நடந்தேறிக் கொண்டே இருக்கிறது.ஆலயத்தைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடிசைகள்.இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும், நேபாளம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் முதிய வயதில் வாழ்க்கையின் முழுமையைத் தேடி, இந்த குடிசைகளில் தங்கியிருக்கிறார்கள் மரணத்தைத் தேடி….!அவர்கள் அதிகாலையிலே எழுந்து கிழக்கில் சூரியன் விழிக்கும் போது, கூட்டம் கூட்டமாக வெளியேறி, காசியில் அமைந்திருக்கும் முக்கியமான வழிபாட்டுத் தலங்களை நோக்கி நகர்கிறார்கள்.தினமும் கங்கையில் குளித்து ‘இறைவா! எங்களை ஏற்றுக் கொள்‘ என்று கோரிக்கை வைக்கிறார்கள்.இவர்கள் காசியைத் தேடிச் சென்று காத்திருப்பதன் நோக்கம், அங்கு கடைசி மூச்சை விட்டால் மோட்சம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை.இறப்பை மகிழ்ச்சியோடு எதிர்நோக்க காத்திருக்கும் முதியோர்களால் சூழப்பட்டிருக்கும் இடங்களில் ஒன்று ‘கங்கா லாப் பவன்!’ இது மணிகர்ணிகா பகுதியில் உள்ளது.ஏற்கனவே அங்கு இருப்பவர்கள் மூச்சு முடிவுக்கு வந்த பின்பு தொடர்ந்து அங்கு வந்து தங்கி உயிரைவிட 12 ஆயிரம் முதியோர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்துவிட்டு, எப்போது அழைப்பு வரும் என்ற காத்துக் கிடக்கிறார்கள். கியூவில் நிற்கும் அளவுக்கு இறப்பு மீது அவ்வளவு ஏக்கம் அவர்களுக்கு.இன்னொன்று ‘காசி லாப் முக்தி பவன்‘ ஜெய்டால் டால்மியா என்ற செல்வந்தர், தன் தாய் காசியில் மரணமடைந்த பிறகு தாயார் நினைவாக இந்த கட்டடத்தை விலைக்கு வாங்கினார்.முதலில் வேத மந்திரம் ஓதவும் பகவத் கீதை சொற்பொழிவுகள் நிகழ்த்தவும், ஜதீக இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் அந்த இடத்தைப் பயன்படுத்தினார்.ஆனால் இறப்பை எதிர்நோக்கும் முதியோர்கள் அந்த மையத்தில் வந்து குவிய, இறுதிக்குரிய இடமாக அது உறுதி செய்யப்பட்டு விட்டது.இங்கு கூடி இருக்கும் முதியோர்களின் மனம் எப்போதும் இறைவனை நாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக வேத மந்திரங்கள் முழக்கம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.நேபாள நாட்டு அரசுக்கும் இந்த மோட்ச நம்பிக்கை இருக்கிறது. அதனால் 30 பேர் தங்கி இருக்கும் இடத்தை நேபாள அரசு பராமரிக்கிறது.அங்கிருப்பவர்களுக்கு உணவு, உடை கொடுத்து இறுதி வழியனுப்பி வைப்பது வரை நேபாள அரசால் நியமிக்கப்பட்டிருப்பவர்களின் பொறுப்பு.இந்த மோட்ச பூமி 1891 மற்றும் 1921-ம் ஆண்டுகளில் நோயால் துவண்டு மயான பூமியாக மாறி ஒரு இலட்சம் பேரை பலி வாங்கியிருக்கிறது.அப்போது மரணத்தை எதிர்நோக்கி நிறைய பேர் அங்கு செல்ல, அவர்களை கட்டுப்படுத்த ஆங்கிலேய அரசு தீர்மானித்து நடவடிக்கை எடுத்தது.உடனே மனித ரீதியான சர்ச்சைகள் தொடங்கின. பின்னர் ஆங்கிலேயே அரசு பின்வாங்கி, ‘நமக்கு என்னப்பா..’ என்று விட்டுவிட்டது.இப்போதும் முடிவைத் தேடி நிறைய மக்கள் அங்கு செல்வதால், அவர்கள் கடைசி காலம் வரை தங்கி இருக்க இடம் கிடைப்பது அரிதாகி விட்டது.அதனால் அங்கு வாழும் மக்கள் வீடுகளை அத்தகைய முதியோர்களுக்காக வாடகைக்கு விடுகிறார்கள்.சிலர் தங்கள் பெற்றோர்களை ஒப்பந்தக்காரர்களிடம் விட்டுவிட்டு பணத்தைக் கட்டிவிட்டுச் சென்று விடுகிறார்கள்.இறுதிக் காலம் வரை பராமரிக்கவும், இறப்புக்குப் பின்புள்ள சடங்குகளை செய்யவும் ஒப்பந்தகாரர்கள் அந்தப் பணத்தைப் பயன்படுத்துகிறார்கள். ‘எல்லாத்தையும் கடவுள் பார்த்துக் கொள்வார்’ என்ற நம்பிக்கைதான் அவர்களுக்கு!காசியில் ஒன்பதாயிரம் ஆண்டுகளாக ‘அணையாத தீபம்’ எரிந்து கொண்டிருக்கிறது.அதிலிருந்து தீயை எடுத்துத்தான் அங்கு இறப்பவர்களின் சடலங்களில் வைத்து உடலை எரிக்கிறார்கள். தினமும் அங்கு 350 சடலங்கள் வரை எரிக்கப்படுகின்றனவாம்.இங்கு உடல் எரிக்கப்படும் போது, உறவினர்களை அழ அனுமதிப்பதில்லை.யாராவது அழுதால் இறந்தவர் ஆன்மா மோட்சத்திற்குச் செல்லாது என்று கூறி அழுகைக்கு அணை போட்டு விடுகிறார்கள்.விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து எட்டிப் பார்த்தால், அதே தெருவில் சற்று தூரத்தில் அமைந்திருக்கிறது அன்னபூரணி ஆலயம். தமிழ்நாட்டு கலைப்பாணி அதன் தனிச்சிறப்பு .தமிழகத்து நாதஸ்வரம் எப்போதும் அங்கு இசையருவியாய் கொட்டிக் கொண்டிருக்கிறது.அங்கு நிகழும் மரணம், எரிப்பு எல்லாவற்றிலும் இசை கலந்து மனித மனங்களில் துக்கம் ஏற்படாமல் இதமாய் வருடிக் கொண்டிருக்கிறது. அதனால் இறந்தவரை முழுமனதோடு முழுமையாக வழியனுப்பி விட்டுச் செல்கிறார்கள்.கங்கை நதி தனது கரைக்கரங்களால் காசி நகரை கிழக்கு-மேற்காக பிரிக்கிறது. மேற்கு கரையில் ‘மணிகர்ணிகாகட்’ உள்ளது.இதுதான் பூமியில் முதலில் தோன்றியதாகவும் பூமி முடியும் வரை (இறந்த உடல்கள்) அங்கு எரிந்து கொண்டே இருக்கும் என்பது ஐதீகம். இங்கு வருடத்தின் 365 நாட்களும், முழுநேரமும் ஓயாத தீயுடன் உடல்கள் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருக்கின்றன .இயந்திரமயமான உலகில் அங்கே எரிப்பதிலும் சுறுசுறுப்பு. உடலை கங்கையில் முக்கிவிட்டு ஈரம் சற்று வடிவதற்காக தரையில் கிடத்துகிறார்கள்.அதற்குள் உரிமையானவர்கள் மொட்டை அடித்துக் கொள்கிறார். தகனம் செய்பவர் ‘ரெடி’ என்றதும் உடல், தகன மேடைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.அணையா தீபமாய் எரியும் தீயில் இருந்து, தீயை எடுத்த சடலத்திற்கு ‘பொட்டு’ வைக்கிறார்கள்.ஒருமணி நேரத்தில் பிடி சாம்பல். அது அப்படியே கங்கையில் கரைக்கப்படுகிறது. அவ்வளவுதான் வாழ்க்கை என்று உணர்த்தப்படுகிறது. அந்த ஜென்மத்திற்கு அங்கே விழுகிறது முற்றுப்புள்ளி.அரிச்சந்திரனின் மனைவி சந்திரமதி இறந்து போன தன் மகன்லோகிதாசனின் உடலை தூக்கிக் கொண்டு மயானத்திற்கு வருவாள். அரிச்சந்திரன் அங்கே வெட்டியான்.அவன் தன் மனைவியையும் மகனையும் அடையாளம் காண்கிறான். ஆயினும் எரிப்பதற்குத் தேவையான பணத்தைக் கொடுத்தால்தான் காரியம் நடக்கும் என்று பொதுநிலை தவறாமல் உண்மை பேசுகிறான்.மரணத்தில் கூட மனசாட்சிக்குப் பயந்து உண்மை பேசியதால் அரிச்சந்திரனின் உண்மை, உலகிற்கே உன்னதம் ஆனது.இந்த அரிச்சந்திரன் வெட்டியானாக இருந்து மகன் உடலை எரித்த ‘அரிச்சந்திர கட்‘ கங்கை ஓரத்தில் உடல்களுக்காகக் காத்திருக்கிறது. இங்கு உடலை எரிப்பதை இந்துக்கள் பெரும் புண்ணியமாகக் கருதுகிறார்கள்.இறப்பு’ என்பது உண்மை, என்று கருதுகிறவர்களில் ஒரு பகுதியினர் மறுபிறப்பு என்பதை நம்புகிறார்கள்.ஒரு மனிதன் முக்தி அடையும் வரை அவன் மீண்டும், மீண்டும் பிறப்பான் என்ற நம்பிக்கை மக்களிடம் மேலோங்கியுள்ளது.அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ‘காசியில் மரணம் முக்தியைத் தரும். அவர்கள் மீண்டும் பிறக்க மாட்டார்கள்‘ என்பது நம்பிக்கையாக்கப் பட்டிருக்கிறது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு