விண்ணில் இருந்து மண்ணுலகம் வந்ததாக நம்பப்படும் இயேசு கிறிஸ்து, மனிதரின் பாவங்களுக்காக தன்னுயிரையே தியாகம் செய்ததை நினைவுகூறும் நாள் தான் புனித வெள்ளி. இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து கொன்ற தினம் இன்று.
சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் வழிய தொங்கி கொண்டிருக்கும் போது இயேசு கிறிஸ்து, தன் தந்தையிடம் “தந்தையே இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்கு தெரியவில்லை” என மக்களுக்காக பரிந்து பேசினார். தன் கடைசி மூச்சு வரை மனிதகுலத்தை அலாதியாக நேசித்தார். தன் உயிரையும் தியாகம் செய்தார். இந்த தியாகத்தை நினைவு கூறும் நாளே “புனித வெள்ளி”.
இந்த தினத்தை ஆண்டுதோறும் புனித வெள்ளியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ரோமானிய ஆட்சியாளர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்த அதிகப்பட்சத் தண்டனையை வழங்கும் போன்டியஸ் பிளான்டி என்ற சட்டத்தின் கீழ் இயேசுவுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
மனித சமுதாயத்துக்கு இயேசு கிறிஸ்து தன்னை தியாகம் செய்த நாளாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் கருதுகின்றனர். இந்த நாளை புனித தினமாக கிறிஸ்துவர்கள் கருதினாலும், அவர்களது துக்கத்தை வெளிப்படுத்த புனித வெள்ளியை கடைப்பிடிக்கின்றனர்.
இதனை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கருதி செயல்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டுக்கான தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 9ஆம் தேதி ஈஸ்டர் அன்று தவக்காலம் நிறைவுறுகிறது. புனித வெள்ளி தவக்காலத்தின் இறுதி வாரமான புனித வாரத்தின் முக்கிய நாளாக கருதப்படுகிறது. தவக்கால நாட்களில் இயேசுவின் சிலுவை பாடுகளையும், அவருடைய மரணத்தையும் கிறிஸ்தவ மக்கள் நினைவு கூறுவார்கள்.
மனமாற்றம் தான் புனித வெள்ளி நாளின் நோக்கம். பாவங்களை விட்டு மனமாறி இயேசுவின் வழியில் வாழ வேண்டும் என்பதை அந்த நாள் வலியுறுத்துகிறது. புனித வெள்ளியின் இருளே, அடுத்து புனித ஞாயிரான ஈஸ்டர் அன்று உயிர்த்தெழுதலில் கிறிஸ்தவர்களை மகிழ்ச்சியடையச் செய்கிறது. இந்த நாளில் நம் பாவங்களுக்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்டு மனம் மாறி புதிய வாழ்க்கையை தொடர வேண்டும்.