ஆண்டு தோறும் சித்திரை முழு நிலவன்று கொண்டாடப்படும் தேனி மாவட்டம் மங்கலதேவி கண்ணகிப் பெருவிழா – இன்று வியாழக் கிழமை நடைபெற உள்ளது. அந்த விழாவில் தமிழர்கள் தாராளமாகக் கலந்து கொண்டு முழு மகிழ்ச்சியோடு பங்கேற்பதைக் கேரள ஆட்சியாளர்கள் எப்போதும் விரும்புவதில்லை. அங்கு காங்கிரசுக் கூட்டணி ஆட்சி நடந்தாலும் கம்யூனிஸ்ட்டுக் கூட்டணி ஆட்சி நடந்தாலும் தமிழர்களுக் கெதிரான இந்த அவலம் தொடர்கிறது. ஆனால் கேரளத்தின் கெடுபிடிகளுக் கிடையே ஆண்டுக்காண்டு தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கிறார்கள். கம்பம் கூடலூர் பகுதியில் செயல்படும் மங்கலதேவி கண்ணகி கோயில் அறக்கட்டளையினர் உணவளித்தல் முதலிய பல்வேறு தொண்டுகளை சிறப்பாக செய்து வருகிறார்கள்.
இந்த ஆண்டு பார்வையாளர் நேரத்தை மொத்தம் 8½ மணியாகச் சுருக்கிவிட்டார்கள். இப்பொழுது கண்ணகி கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதை குமுளியிலிருந்து கேரள வனப்பகுதியில் 13 கி.மீ. உள்ளது. கேரள ஜீப்புகளில் பயணம் செய்து கண்ணகி கோயிலுக்குப் போக வேண்டும். அப்பகுதி கேரள அரசின் வனத்துறையில் உள்ளது. இந்த வனத்துறையைக் காரணம் காட்டி கேரள ஆட்சியாளர்கள் கண்ணகி கோயிலுக்கு எதிராகப் பல முனைக் கெடுபிடிகளைச் செய்கிறார்கள். இதே கேரள அரசின் வனத்துறைக்குள், புலிகள் வாழும் காட்டுப் பகுதியில் தான் ஐயப்பன் கோயில் உள்ளது. அங்கு பல மாதங்கள் – இரவு பகலாகப் பக்தர்கள் போய் வழிபட அனைத்து வசதிகளையும் செய்து தருகின்றனர் கேரள ஆட்சியாளர்கள்.
ஐயப்பன் கோயில் முழுக்கவும் மலையாள மாநிலத்திற்குள் உள்ள மலையாளிகள் கோயில். கண்ணகி கோயில் தமிழர் கோயில்; கண்ணகி தமிழ்த் தெய்வம். இந்த இனப்பாகுபாட்டை வைத்துக் கொண்டு கேரள ஆட்சியாளர்கள் கண்ணகி விழாவுக்கு எதிராகச் செயல்படுத்தும் கெடுபிடிகள் சகிக்க முடியாதவை!
ஒவ்வொரு ஆண்டும், விழாவுக்கு முன்னெச்சரிக்கையாக இரு மாநில மாவட்ட ஆட்சியாளர்களின் கூட்டுக் குழுக் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டங்கள் கேரள மாநிலத்திற்குள் தான் நடக்கின்றன. தேனி மாவட்ட ஆட்சியர்கள் அங்கு போக வேண்டும். கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஒரு ஆண்டு கூடத் தமிழ்நாட்டுப் பகுதிக்கு வரமாட்டார். தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் ஓராண்டு தமிழ்நாட்டிலும் மறு ஆண்டில் கேரளத்திலும் பேச்சு நடத்த கேட்டார்களா இல்லையா என்று தெரியவில்லை. மாநிலச் சமநிலையில், இடம் மாறி மாறித்தான் கூட்டுக் குழுக் கூட்டம் நடத்த வேண்டும்.
தமிழ்நாட்டின் கூடலூரிலிருந்து பளியங்குடி வழியாக நம்முடைய கண்ணகி கோயிலுக்கு – தமிழ்நாட்டு எல்லைக் குள்ளேயே வழி உள்ளது.அது சற்றொப்ப 7 கி.மீ. நீளம். அதில் தார்ச் சாலை போட வேண்டும். கண்ணகி கோயில் தமிழ்நாட்டு எல்லைக்குள் தான் உள்ளது. 1996-97 வாக்கில் தி.மு.க. ஆட்சி நடந்த போது அறநிலையத் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் பளியங்குடி வழியிலான பாதையைத் தார்ச்சாலையாக மாற்றிட அறிவித்து வேலைகள் தொடங்கினார். ஆனால் கேரள அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததும், அத்திட்டத்தை கைவிட்டது தி.மு.க. ஆட்சி அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இதைக் கண்டு கொள்வதே இல்லை!
இந்தியத் தேசியம் பேசும் காங்கிரசு மற்றும் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளில் உள்ள மலையாளிகள் தமிழர்களுக்கு எதிரான காழ்புணர்ச்சியுடன் பளியங்குடிப் பாதையைத் தடுக்கிறார்கள். தமிழ்நாட்டு கழகங்களுக்கு இனத் தற்காப்புணர்ச்சி இல்லை. சட்டப்படி தங்கள் எல்லையில் போட வேண்டிய தார்ச் சாலையைப் போடக் கூட மலையாளிகளின் கட்டளையை எதிர்பார்கிறார்கள்!
அண்மையில் தமிழ்நாட்டு அதிகாரிகள் பளியங்குடிப் பாதையைச் சீர்செய்வதாகச் சொல்லியுள்ளார்கள். தார்ச்சாலை போட வேண்டும்.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையில் கண்ணகி கோயிலை சேர்க்க இருப்பதாக அண்மையில் அறநிலையத் துறை அறிவிப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. பாராட்டத் தக்க முடிவு! மலையாளிகள் எதிர்த்தாலும் இதில் பின்வாங்கக் கூடாது. தமிழ்நாடு அரசு அறநிலையத்துறையில் சேர்க்க வேண்டும்.
- உடனடியாகத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து அங்கு கண்ணகி விழாவை மாலை 5 மணி வரை மக்கள் கொண்டாட உடன்பாடு காண வேண்டும்.
- அடுத்த ஆண்டிலிருந்து கண்ணகி விழாவை சித்திரை முழுநிலவுக்கு முதல் நாள் – முழு நிலவு நாள் – அடுத்த நாள் என மூன்று நாள் தமிழர்கள் மலையில் கொண்டாட கேரள அரசுடன் உடன்பாடு போட வேண்டும். கேரள அரசு மறுத்தால் பளியங்குடி பாதை வழியாகச் சென்று மக்கள் மூன்று நாள் விழாவில் பங்கேற்கத் தமிழ்நாடு அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
- கண்ணகிக் கோயிலை புதுப்பித்து முழு சிலையுடன் புதிய கட்டுமானம் எழுப்ப வேண்டும்.
- தமிழ்நாடு – கேரள எல்லையைத் தன்னிச்சையாக இணைய வழியில் வரையறுக்க அண்மையில் கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாட்டுப் பகுதிகளைத் தனது மாநில எல்லைக்குள் இணைத்து வருகிறது. இதைத் தடுப்பதுடன், தமிழ்நாடு அரசு கேரளத்தின் ஓரத்தில் உள்ள தமிழ்நாடு எல்லையை நேரடி அளவு செய்து எல்லைக் கல் நட்டு – வேலி போட வேண்டும்.
தெய்வத் தமிழ்ப் பேரவை