சென்னை: நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் டெல்டா மாவட்ட வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அதில் தேர்தல் வியூகம் குறித்து அறிவுரை கூற உள்ளார். பாஜ கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்க்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலுவான கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறது. பிரதமர் மோடிக்கு எதிராக அணி திரளும் வகையில், பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் 23ம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடந்தது. அப்போது அதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 15 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இதன் 2-வது கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 17, 18ம் தேதிகளில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் திமுக உள்ளிட்ட 26 கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டணிக்கு ‘இந்தியா’ என்ற பெயர் சூட்டப்பட்டது. மேலும் 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவும் உருவாக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை வீழ்த்துவதற்கான பணிகளில் ‘இந்தியா’ கூட்டணி தீவிரமாக களம் இறங்கியுள்ளது. அதேநேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறுவதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்று கட்சியினருக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் திமுக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். பூத் கமிட்டிகளும் வாக்குச்சாவடி வாரியாக அமைக்கப்பட்டுள்ளது. இவை திமுக தலைமை கழகத்தால் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை திமுகவினர் சேர்த்துள்ளனர். இந்நிலையில் வாக்குசாவடி பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார்.
இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதுமுள்ள வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை ஒரே நேரத்தில்-ஒரே இடத்தில் சந்திப்பதைவிட, மண்டலம் மண்டலமாக சென்று சந்திப்பது பயன் தரும் என்பதால் முதற்கட்டமாக, தீரர்கள் கோட்டமாம் திருச்சி-கருமண்டபம் ராம்ஜி நகரில், டெல்டா மாவட்டங்களின் வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சி பாசறை கூட்டம் இன்று காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சி முகாமில் டெல்டா மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை வடக்கு, தெற்கு, மத்தி, திருச்சி வடக்கு, தெற்கு, மத்தி, புதுக்கோட்டை வடக்கு, தெற்கு ஆகிய 15 மாவட்டங்களில் இருந்து 12 ஆயிரத்து 645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இதற்காக 11 ஏக்கரில் சுமார் 13 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாவட்டத்துக்கு உட்பட்ட 12,645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். மாலை 5 மணிக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு செல்கிறார். அவருக்கு திருச்சி மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதல்வர், அங்கு மதிய உணவு அருந்திவிட்டு, ஓய்வு எடுக்கிறார். தொடர்ந்து அங்கு அவரை, திமுக மூத்த வழக்கறிஞர்கள் சந்திக்க உள்ளனர். பின்னர் அவர், மாலை 5 மணிக்கு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வியூகம் குறித்து அவர்களுக்கு அறிவுரை வழங்க உள்ளார். மேலும் தேர்தலை சந்திக்கும் வகையில் திமுக ஆட்சியின் 2 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் பட்டி, தொட்டி எங்கும் எடுத்து செல்ல வேண்டும் என்றும் அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்க உள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (27ம் தேதி) காலை 10 மணியளவில் திருச்சி கேர் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ள விவசாயிகளுக்கான வேளாண் சங்கமம்-2023 என்ற தலைப்பின் கீழ் மாநில அளவிலான வேளாண் கண்காட்சி, கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இந்த கண்காட்சியில் விவசாயிகள் இன்றைய நவீன காலக்கட்டத்தில் எப்படி உபகரணங்களை பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்துவது என்பது குறித்த பல்வேறு உபகரணங்கள் இடம்பெறுகிறது. இதுவரை தனியார் நிறுவனங்கள் மட்டுமே நடத்திய இதுபோன்ற கண்காட்சியை முதல் முறையாக தமிழக அரசு நடத்துகிறது. முன்னதாக விவசாயிகளுடன் முதல்வர் கலந்துரையாடுகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் 12.30 மணி அளவில் தஞ்சை புறப்பட்டு செல்லும் முதல்வர், சுற்றுலா மாளிகைக்கு செல்கிறார். அங்கு மதியம் உணவுக்கு பிறகு சிறிது நேரம் ஓய்வெடுக்கும் முதல்வர் மாலை ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மாலை 5 மணிக்கு தஞ்சை புது பஸ் நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள மாநாடு மைய கட்டிடத்தில் முடிவுற்ற புதிய கட்டிடங்களை திறந்து வைக்கிறார். ரூ.61.79 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மாநாடு மைய கட்டிடம், ரூ.10.46 கோடியில் கட்டப்பட்ட ஆம்னி பஸ் நிலையம், ரூ.4.39 கோடியில் கட்டப்பட்ட ராஜகோரி தகன மேடை, ரூ.7.32 கோடியில் மாநகராட்சி பள்ளிகளை சீர்மிகு பள்ளிகளாக்கிய திட்டம், ரூ.11.50 கோடியில் தஞ்சை அருளானந்தம் நகரில் கட்டப்பட்ட ஸ்டெம் பார்க், ரூ.2.61 கோடியில் நூலகத்துடன் கட்டப்பட்ட அறிவுசார் மைய கட்டிடம், ரூ.15.61 கோடியில் கட்டப்பட்ட காந்தி வணிக வளாக கட்டிடம், ரூ.2.25 கோடியில் மேம்படுத்தப்பட்ட கருணைசாமி குளம், ரூ.2.95 கோடியில் பெத்தண்ணன் கலையரங்கை மாற்றி கட்டப்பட்ட தியேட்டர் என மொத்தம் ரூ. 140 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைக்கிறார். தஞ்சை நிகழ்ச்சிகள் முடிந்ததும் முதல்வர், கார் மூலம் மீண்டும் திருச்சிக்கு வந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். முதல்வர் வருகையையொட்டி திருச்சி விழாக்கோலம் பூண்டுள்ளது.